பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மொழிகள் பல்வேறு கலாச்சாரங்கள் என 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவை நிர்வாகம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. பிரதமரின் வலது கரமாக இருந்து மொத்த நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்தும் அமைச்சரவை செயலாளர் பற்றி இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அமைச்சகங்களை ஒருங்கிணைக்கும் ஒரு தலைமை செயலகமாக அமைச்சரவை செயலகம் செயல்படுகிறது. இந்திய அரசின் பணிச் செயற்பாடு விதிகள் மற்றும் அரசின் பணி ஒதுக்கீடு விதிகள் சட்டத்தின் படி, அரசு நிர்வாகத்தினை கவனித்து வருகிறது.
மொத்த அமைச்சகங்களிலும் பிற அரசு துறைகளிலும் பணிகளைச் சுமூகமாக மேற்கொள்ள உதவும் அமைச்சரவை செயலகம், மத்திய அமைச்சரவையின் ஒருங்கிணைப்பை உறுதிபடுத்துவதன் மூலம், முடிவெடுப்பதில் அரசுக்கு உதவுகிறது. அமைச்சரவை மற்றும் பிற சிறப்புக் குழுக்கள் தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களைய வழிவகை செய்கிறது. பிரதமர் அலுவலகத்திலிருந்து மிக அருகில் இருக்கும் இந்த அமைச்சரவை செயலகம் நாட்டின் செல்வாக்கு மிகுந்த அரசு அலுவலகமாக உள்ளது.
சிவில், ராணுவம் மற்றும் உளவுத்துறை ஆகிய மூன்று பிரிவுகளாக இயங்கும் இந்த அமைச்சரவை செயலகம், மத்திய அமைச்சரவைக்கு அரசின் கொள்கை குறித்து ஆலோசனை வழங்குவதோடு அமைச்சகங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்கிறது. மேலும், குடியரசுத் தலைவர் மற்றும் துணைகுடியரசு தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு, துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மாதாந்திர ஒருங்கிணைந்த அறிக்கைகளை அனுப்புவதற்கும் செயலகம் பொறுப்பேற்றுக் கொள்கிறது.
எடுத்துக்காட்டாக, 370வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டு ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கப்பட்டபோது சிக்கலான மாற்றத்தை நிர்வகிக்க அமைச்சரவை செயலகம் உளவுத்துறை அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. நேரடியாகப் பிரதமரின் கீழ் செயல்படும் அமைச்சரவை செயலகத்தின் செயலாளரே அமைச்சரவை செயலாளர் என்று அழைக்கப்படுகிறார்.
மத்திய அரசின் நிர்வாகப் படிமுறையில் அமைச்சரவை செயலாளர் பதவி என்பது தனித்துவமான ஒரு உயர் பதவியாகும். இந்தப் பதவிக்கு, சிவில் சர்வீசஸ் வாரியத்தின் தலைவர் மற்றும் செயல் அதிகாரியே அமைச்சரவை செயலாளராக இருப்பார். சிவில் சர்வீசஸ் வாரியத்தின் தலைமை, முக்கிய பதவிகளுக்கு மூத்த நியமனங்களை மேற்பார்வையிடுதல், மற்றும் நிர்வாகத்துக்கான செயலாளர்கள் குழுவின் தலைவராக இருத்தல் ஆகிய பணிகளையும் அமைச்சரவை செயலாளரே கவனிப்பார்..
பிரதமரின் உத்தரவின் பேரில் அமைச்சரவை மற்றும் அதன் குழுக்களின் கூட்டங்களை நடத்துதல், நிகழ்ச்சித் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் சுற்றறிக்கை அளித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் அமைச்சரவை செயலாளர், அமைச்சகங்கள் சீராகச் செயல்படுவதை உறுதி செய்வதோடு முக்கியமான விஷயங்களில் நேரடியாகப் பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் உள்ளார்.
இந்த உயரிய பதவிக்கு கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.சோமநாதன் நியமிக்கப் பட்டார். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. இவர் அமெரிக்காவில் உள்ள உலக வங்கியில் இளம் தொழில் வல்லுனர்கள் திட்டத்தின் கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய துணைத் தலைவர் பதவியில் நிதிப் பொருளாதார வல்லுனராகப் பணியாற்றி உள்ளார்.
தமிழகத்தின் முதல்வராகக் கருணாநிதி இருந்த காலத்தில் முதல்வரின் செயலாளராகப் பணியாற்றிய டிவி சோமநாதன், கூடுதல் தலைமை செயலாளர், மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குனர் என பல்வேறு உயர்பதவிகளை வகித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்கு இருந்த சோமநாதன், 14000 கோடி ரூபாயில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஏலத்தை வழங்கி, அந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் முக்கிய அதிகாரியாக இருந்தார்.
பின்னர் மத்திய பதவிக்குச் சென்ற டிவி சோமநாதன், கார்ப்ரேட் விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். தொடர்நது 2015 முதல் 2017 வரை பிரதமர் அலுவலக செயலாளராகப் பணியாற்றி வந்தார். 2018ம் ஆண்டு மாநிலப் பணிக்கு வந்த பின் வணிகவரித் துறை ஆணையராகப் பணியாற்றினார். கடந்த 2019 ஆம் ஆண்டு, மீண்டும் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட டிவி சோமநாதன் மத்திய நிதித் துறையின் செலவுப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து நிதித் துறை செயலாளராகி, நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றதோடு, பட்டயக் கணக்காளர் மற்றும் நிறுவனச் செயலாளராகவும் கூடுதல் தகுதிகளைப் பெற்றுள்ள டிவி சோமநாதன் மத்திய அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
நாட்டின் உயர் அதிகாரம் மிக்க ஒரு பதவிக்குக் கல்வி மற்றும் நிர்வாக ரீதியாக மிகவும் தகுதியான அதிகாரிகளில் ஒருவராக விளங்கும் டிவி சோமநாதன், பல வழிகளில், அமைச்சரவைச் செயலாளர் நிர்வாகத்தின் நங்கூரமாகச் செயல்படுகிறார்.
















