கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜக கணிசமான வார்டுகளை கைப்பற்றியுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
நடைபெற்று முடிந்த கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிகப்பட்டியான வார்டுகளை கைப்பற்றி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 2020ம் ஆண்டு நடைபெற்ற கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜக 1,597 வார்டுகளில் வெற்றிப்பெற்றிருந்தது.
ஆனால், இந்த முறை 1,919 வார்டுகளில் பாஜக வெற்றிவாகை சூடியுள்ளது. இது கேரளாவில் பாஜக அடைந்து வரும் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் 45 ஆண்டுகளாக இடது சாரிகளின் கோட்டையாக இருந்து வந்தது. அந்தக் கோட்டையைத் தகர்த்தெறிந்து, அங்குக் காவிக்கொடியை நாட்டியுள்ளது பாஜக. திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 101 வார்டுகள் உள்ளன.
அதில் 50 வார்டுகளை பாஜக தொக்காகத் தூக்கியுள்ளது. கேரள அரசியல் வரலாற்றில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றுவது இதுவே முதல்முறை. அதேபோல், பாலக்காடு நகராட்சியிலும் பாஜக பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. அங்குள்ள 53 வார்டுகளில் 25 வார்டுகளை தன்வசமாக்கியுள்ளது.
இந்த வெற்றிகளால் கேரள பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. குறிப்பாக, ஆளும் சிபிஎம் கட்சியின் அலுவலகம் முன்பு பாஜகவினர் நூற்றுக்கணக்கில் திரண்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கேரள பாஜகவின் மூத்த தலைவரான a.d.v.gopalakrishnan தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நடனமாடினார்.
அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதேபோல, திருவனந்தபுரம், கொச்சின், பாலக்காடு, இடுக்கி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பாகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரத்தில் பாஜக சார்பில் வாகன பேரணி நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர், பாஜக மாவட்ட தலைவர்கள், வெற்றிப்பெற்ற கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேட்டியளித்த ராஜீவ் சந்திரசேகர், பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியல், ஊழல் இல்லாத நிர்வாகம் ஆகியவற்றிக்காக மக்கள் இந்த வெற்றியை அளித்துள்ளதாகக் கூறினார். மேலும், மாற்றத்தையும், வளர்ச்சியையும் விரும்பும் மக்கள் பாஜகவிற்கு ஆதரவளிக்க தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் முதன்முறையாகப் பாஜக ஒரு எம்பியை பெற்றது. தற்போது நடைபெற்று முடிந்துள்ள உள்ளாட்சி தேர்தலிலும் அதிக வார்டுகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதனால், நம்பிக்கையும், உற்சாகமும் அடைந்துள்ள கேரள பாஜகவினர், அடுத்து சட்டமன்ற தேர்தலில் சாதிக்க தயாராகி வருகின்றனர்.
















