சிட்னியின் Bondi கடற்கரையில் யூதப் பண்டிகையைக் கொண்டாடிய யூத மக்கள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும் மகனும் நடத்திய பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்கு, ஆஸ்திரேலியாவின் உளவுத்துறை மற்றும் காவல்துறையின் அலட்சியமே காரணம் என்பது அம்பலமாகியுள்ளது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆஸ்திரேலியாவின் சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த யூத எதிர்ப்பு பயங்கரவாத தாக்குதல், ஆஸ்திரேலிய உளவுத் துறை மற்றும் காவல் துறையின் தோல்வியைப் பல்வேறு வகைகளில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நவீத் ஏற்கெனவே Australian Security Intelligence Organisation எனப்படும் ஆஸ்திரேலியாவின் முக்கிய உளவுத் துறையால், யூத எதிர்ப்பு மற்றும் ISIS இஸ்லாமிய பயங்கரவாத தொடர்புகளுக்காக விசாரிக்கப் பட்டுள்ளார்.
குறிப்பாக சிட்னியைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய ஐஎஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நவீத் அக்ரம் சுமார் 6 மாத காலம் காவல்துறை விசாரணையில் இருந்தாக, அந்நாட்டு உளவுத் துறையின் தலைவர் Mike Burgess தெரிவித்துள்ளார். தக்க ஆதாரங்கள் இருந்த போதிலும், நாட்டுக்கோ யூத மக்களுக்கோ நவீத் அக்ரம் ஒரு அச்சுறுத்தல் இல்லை என்ற முடிவுக்கு வந்த காவல்துறை விசாரணையை முடித்து வைத்தனர். மேலும் அக்ரம் மீதான கண்காணிப்பையும் நிறுத்தி விட்டனர்.
இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தீவிரத் தொடர்பில் இருந்த நவீத்க்கு நற்சான்றிதழ் வழங்கிய காவல்துறையின் நடவடிக்கையே இப்போது போண்டி கடற்கரைப் பயங்கரவாத தாக்குதலில் பலர் பலியாக காரணமாகியுள்ளது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் நடத்திய நவீத் அக்ரமின் தந்தைச் சஜித் அக்ரம் காவல்துறையினரால் கொல்லப் பட்ட நிலையில் அவரது ஆறு உரிமம் பெற்ற துப்பாக்கிகளும் பயங்கரவாத தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
தந்தையும் மகனும் போண்டி கடற்கரைக்கு வந்த காரில் ISIS அமைப்பின் கொடி பொருத்தப்பட்டிருப்பது காவல்துறையினரின் கண்ணில்படாமல் இருந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 1,17,000 யூத மக்கள் வாழும் ஆஸ்திரேலியாவில் இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்தே யூத மக்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் உருவாகி உள்ளது. குறிப்பாகக் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் சுமார் 166 யூத எதிர்ப்பு தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளன.
மெல்போர்னில் உள்ள Adass Israel அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயம் தீவைத்துக் கொளுத்தப் பட்டது. முன்னதாக 2024 ஆம் ஆண்டு அக்டோபரில் போண்டி அருகில் Lewis’ Continental Kitchen என்ற kosher cafe யூத எதிர்ப்பு பயங்கரவாதிகளால் தீ வைத்து அழிக்கப்பட்டது. இந்த வன்முறையில் (Torah) தோராவின் Hebrew வரிகள் பொறிக்கப்பட்ட ஓலைச்சுவடி தீக்கிரை ஆனது. மேலும், அதே கடற்கரை அருகில் இருக்கும் Curly Lewis என்ற மதுபான ஆலையும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் குறிவைக்கப் பட்டது.
Special Operation Avalite என்பதன் கீழ் மட்டும் 15 அதிதீவிரத் தாக்குதல்கள் நடந்துள்ளன. New South Wales நகரில் மட்டும் Strike Force Pearl-லின் கீழ் 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நடந்துள்ளன.சுமார் 12க்கும் மேற்பட்டோர் யூத எதிர்ப்பு வன்முறைகளுக்காகக் கைது செய்யப் பட்டுள்ளனர்.
சிட்னி மற்றும் மெல்போர்னில் உள்ள யூதத் தலைவர்கள், தங்களுக்குப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் இருப்பதாகத் தொடர்ந்து புகார் அளித்துள்ளனர். ஏற்கெனவே பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் ஆஸ்திரேலிய அரசின் கொள்கை யூத எதிர்ப்புக்கு எரியூட்டுவதாகக் குற்றஞ்சாட்டிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் யூத வெறுப்பின் “புற்றுநோய் செல்களை” கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும் எச்சரித்திருந்தார்.
மேலும் இது தொடர்பாக ஆஸ்திரேலியப் பிரதமருக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் தான் எழுதிய எச்சரிக்கைக் கடிதத்தையும் அல்பானீஸ் புறக்கணித்து விட்டதாகவும் நெதன்யாகு கூறியுள்ளார். இதற்கிடையே, சிட்னி கடற்கரைப் பயங்கரவாத தாக்குதலை நேரில் பார்த்த சாட்சியங்கள் ஆஸ்திரேலியாவின் காவல்துறையின் அலட்சியத்தை மேலும் அம்பலப்படுத்தியுள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரைத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், இடையில் பலமுறைத் தோட்டாக்கள் நிரப்ப பட்டதாகவும், ஆனால், எந்தவகையிலும் மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்காமல் காவல்துறை வேடிக்கைப் பார்த்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்தப் பொறுப்பில்லாத நடவடிக்கை மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
உளவுத்துறை மற்றும் காவல்துறையின் அலட்சியத்தால் நீண்டகால யூத எதிர்ப்பு வன்முறைகள் இப்போது பயங்கரவாத தாக்குதலாக மாறியுள்ளது. உளவுத்துறைச் சீர்திருத்தம், பயங்கரவாதிகளைச் சிறப்பாகக் கண்காணித்தல் மற்றும் காவல்துறையினருக்குப் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகள் ஆகியவை ஆஸ்திரேலிய அரசின் அவசரத் தேவைகளாக உள்ளன என்று பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
















