பதவிக்கு வந்த 10 மாதங்களில் 8 போரை நிறுத்தியுள்ளதாக மீண்டும் பெருமை பேசியுள்ள அதிபர் ட்ரம்ப் தனக்கு பிடித்த வார்த்தை TARIFF என்றும் கூறியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 17 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சுமார் 14.5 லட்சம் அமெரிக்க ராணுவ வீரர்களின் சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் கிறிஸ்துமஸ் பரிசாகச் சிறப்பு ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார். அமெரிக்கா உருவான 1776 ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில், சுமார் 1,776 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை, Warrior Devidend என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தகுதியுள்ள இராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
இதற்கான நிதி ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் வீரர்களின் கைகளில் சென்றடையும் என்றும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். வெளிநாடுகள் மீது விதிக்கப்பட்ட வரிகள் மற்றும் ஜூலை 4 ஆம் தேதி கொண்டுவந்த Big Beautiful Bill என்ற அழைக்கப் பட்ட புதிய பட்ஜெட் மசோதா”விலிருந்தும் பெறப்பட்டதாகத் தனது உரையில் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். 20 நிமிட உரையில், பெரும்பகுதி தனது பொருளாதார சாதனைகள்குறித்து பெருமை பேசிய அதிபர் ட்ரம்ப், 7 முறை முன்னாள் அதிபர் ஜோபைடனின் பெயரைக் குறிப்பிட்டதுடன், சரிந்து கிடந்த அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தான் உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்தகால அமெரிக்கஅதிபர்களின் புகைப்படங்களுடன் அவர்களின் தோல்விகளை எடுத்துரைக்கும் படங்களையும் காட்சிப்படுத்திய அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் வலிமையை மீட்டெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பதவிக்கு வந்த 10 மாதங்களில் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும் ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அழித்துள்ளதாகவும், காசா போரை முடிவுக்குக் கொண்டுவந்து, 3,000 ஆண்டுகளில் முதல் முறையாக மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவந்துள்ளதாகவும், உயிருடனும் பிணமாகவும் ஹமாஸிடம் இருந்த பணயக்கைதிகளை மீட்டுள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க பொருளாதாரத்தை அதிபர் ட்ரம்ப் கையாண்ட விதத்தை 33 சதவீத மக்களே அங்கீகரித்துள்ளனர். மக்கள் செல்வாக்கு சரிந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் விலைவாசியும் பணவீக்கமும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதார சரிவுக்கு எந்த விளக்கமும் அளிக்காத அதிபர் ட்ரம்ப், கனடா, மெக்சிகோ, பிரேசில் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது விதித்த வரிகளே அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியதாகக் கூறியுள்ளார்.
தனது நிர்வாகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டத்தையும் முன்வைத்த அதிபர் ட்ரம்ப் உலகமே பொறாமை படும் அளவுக்கு, குடிமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விசுவாசமாகவும் தனது அடையாளத்தில் நம்பிக்கையுடனும், இருக்கும் அமெரிக்காவை பார்க்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
















