அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் இந்தியா பரந்த சிந்தனையுடன் செயல்படும் நிலையில், வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1971ம் ஆண்டு விடுதலைப் போருக்குப் பிறகு வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இருந்த உறவு இப்போது தலைகீழாக மாறியுள்ளது. 2024ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான அடிப்படைவாத இஸ்லாமிய அரசியல் வங்கதேசத்தில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த Inqilab Moncho இன்குலாப் மோன்சோ அமைப்பின் தலைவரான ஷெரிப் உஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஹாடியின் கொலையாளிகள் அவாமி லீக் கட்சியுடன் தொடர்புடையவர் என்றும், அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டிய வன்முறையாளர்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வைத் தூண்டி விட்டனர்.
தொடர்ந்து, திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் அடித்துக் கொன்று மரத்தில் கட்டி தீவைத்து கொளுத்தப்பட்டார். மேலும், அம்ரித் மொண்டல் சாம்ராட் என்ற இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்திய தூதரகம் மற்றும் இந்திய துணை தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டன. தொடர்ந்து இந்தியா விசா சேவைகளைக் கால வரையரையின்றி நிறுத்தி வைத்தது. முகமது யூனுஸ் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதலில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ‘ஜமாத்-இ-இஸ்லாமி’ மீதான தடையை நீக்கினார்.
பிறகு, இன்னொரு பயங்கரவாத அமைப்பான ‘அன்சாருல்லா பங்களா டீம் (ABT)’ தலைவர் முகமது ஜசிமுதீன் ரஹ்மானியை விடுதலை செய்தார். வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவையும் விடுதலை செய்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரில் தேர்தலும் பொது வாக்கெடுப்புக்கு நடைபெற உள்ள நிலையில், ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையில் நாட்டிலுள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் ஓரணியில் திரண்டு இந்தியாவுக்கு எதிரான கொள்கையைத் தீவிரமாக்கியுள்ளன.
ஏற்கெனவே, ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால ஆட்சியில் வங்கதேசத்தில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமானதாகப் பெரும்பாலான வங்கதேச இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கும் ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க சம்மதிக்காததும் இந்தியா மீதான வெறுப்புணர்வு வளர்வதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்த யூனுஸ் அரசு, சீனா, பாகிஸ்தான் மற்றும் மேற்குலக நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் சிலிகுரி தாழ்வாரம் பகுதியில் சீனா தனது ராணுவ உள்கட்டமைப்பை உருவாக்க வழிவகுத்துள்ளது. மேலும், சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகங்களை பாகிஸ்தான் மற்றும் சீன இராணுவம் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானுடனான வங்கதேசத்தின் உறவு இந்தியாவுக்கு ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
கலீதா ஜியா ஆட்சியில் இதே போல் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டிய போதுதான் உல்பா என்ற பெயரில் அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணி போன்ற பயங்கரவாத அமைப்புகள் வங்கதேசத்தில் இருந்து அசாமில் தாக்குதலைகளை நடத்தின. வங்கதேசத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயின் ஆதிக்கம் இந்தியாவின்உள்நாட்டு பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகவே அமைகிறது.
அடுத்த ஆண்டுக்குள் கங்கை நீர் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டிய தருணத்தில், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் வங்கதேசம் நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்கு சிக்கலை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் உதவியால் வங்கதேசம் உருவானதும் அந்நாட்டில் ஜமாத்-இ-இஸ்லாமிக்கு இடமில்லாமல் போனது. பாகிஸ்தான் இராணுவத்தை ஆதரித்த ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவர்கள், பிறகு பாகிஸ்தானுக்கே தப்பிச் சென்றனர்.
பிறகு கலீதா ஜியாவின் கணவர் ஜியாவுர் ரஹ்மான்தான் ஜமாத்-இ-இஸ்லாமியை மீண்டும் வங்கதேசத்தில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். ஜியாவுர் ரஹ்மான் மற்றும் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சியின் ஆதரவுடன் அதிகாரம் செலுத்திவந்த ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை ஷேக் ஹசீனா தடை செய்தது வரலாறு.
இப்போது முகமது யூனுஸ் ஆட்சியில், ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் இழந்த செல்வாக்கையும் அதிகாரத்தையும் பெற்றுள்ளது. 1971க்குப் பிறகு வங்கதேசதில் எழுச்சி பெற்றுள்ள இஸ்லாமிய பயங்கரவாத ஜிஹாதி அமைப்புகளால் மிகப்பெரிய சவால்கள் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்று இந்தியா ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ள நிலையில், வங்கதேசத்தின் ஸ்திரத்தன்மை இந்தியாவின் பாதுகாப்புக்கு குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுக்கு மிக முக்கியமானதாகும்.
















