ஹரியானா மாநில வன்முறை காரணமாக, 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 159 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், நூ மாவட்ட எஸ்.பி. அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தின் குருகிராம் மாவட்டத்தில் கடந்த 31-ம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக ஊர்வலம் நடந்தது. இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நூ மாவட்டத்தை ஊர்வலம் அடைந்தபோது, இஸ்லாமிய இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
மேலும், இஸ்லாமியர்கள் நடத்திய கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 2 காவலர்கள் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த 1 தொண்டர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இது தவிர, ஏராளமான வாகனங்களுக்கு கலவரக்காரர்கள் தீவைத்தனர். இக்கலவரத்தைக் கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கலவரம் மேலும் பரவக்கூடாது என்பதற்காக நூ, பரிதாபாத், பல்வால், குருகிராம் உட்பட 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு, தேவையற்ற வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில், இணையதளச் சேவைகளும் முடக்கப்பட்டன. இக்கலவரம் தொடர்பாக இதுவரை 159 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், நூ மாவட்ட எஸ்.பி.யாக இருந்த வருண் சிங்லா அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இவர், பீவானி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில், புதிய எஸ்.பி.யாக நரேந்திர பீஜார்னியா நியமிக்கப்பட்டிருக்கிறார்.