அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, திருடர்கள் அனைவருக்கும் மோடி என்பது பொதுவான பெயராக இருப்பது எப்படி? என்று பேசினார்.
இதையடுத்து, ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி, ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால் எம்.பி. பதவியை இழந்த ராகுல் காந்தி, சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பையே குஜராத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராகுல் காந்தி. தொடர்ந்து, இவ்வழக்கில் நேற்று மறுபிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.
அதில், இவ்வழக்கில் தான் குற்றமற்றவன் என்றும், ஆகவே, 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், தனக்கு அளிக்கப்பட்ட தண்டனை நிலைக்கத் தக்கதல்ல என்றும் கூறியிருந்தார். இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருக்கிறது.