உலகிலேயே முதல்முறையாக, இந்திய விமானப் படை, சுமார் 200 பேருக்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய, ஒரு சிறிய மருத்துவமனையை, போர் விமானத்தில் எடுத்து சென்று, பாராசூட் மூலம், பத்திரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவில், பல இடங்களில் அதிக வெள்ளம், நிலநடுக்கம், போன்ற இயற்கை பேரிடர் காரணமாக பெரும் ஆபத்து ஏற்படும் வேளையில், பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி மற்றும் தேவையான மருத்துவச் சிகிச்சை அழைப்பது, சவாலாகவே உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில் , இந்திய விமானப்படை, எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எடுத்து செல்லக் கூடிய, தற்காலிக மருத்துவமனையை, உலகிலேயே முதல்முறையாக இந்தியா உருவாக்கியுள்ளது.
இந்த சிறிய மருத்துவமனை, எந்த நேரத்திலும், எந்த அவசரநிலையையும் எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள இந்திய விமானப்படை, ஆக்ராவில் உள்ள மால்புரா மண்டலத்தில் இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
ஆக்ராவை தளமாகக் கொண்ட இந்திய விமானப்படையின் ஏர் டெலிவரி ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் எஸ்டாப்ளிஷ்மென்ட் (ADRDE) அமைப்பு, இதற்காக பிரத்யேகமான பாராசூட்களை உருவாக்கி வடிவமைத்திருக்கிறது.
இரண்டு பாராசூட்களால் ஆன , 720 கிலோ எடை கொண்ட இந்த சிறிய மருத்துவமனையை, 1,500 அடி உயரத்தில் இருந்து இந்திய விமானப் படை தரையிறக்கியது.
தரையிறங்கிய 12 நிமிடங்களில் செயல்படத் தொடங்கிய இந்த சிறிய மருத்துவமனை கனசதுர வடிவிலானது. ஒரே நேரத்தில் 200 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் கொண்டதாக இந்த மருத்துவமனைஉருவாக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி குண்டுகள், தீக்காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் பெரிய ரத்தப்போக்கு போன்ற பல்வேறு படுகாயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மேம்பட்ட மருத்துவ வசதிகளும் இந்த சிறிய மருத்துவமனையில் உள்ளன.
சிறியதான அறுவை சிகிச்சை செய்யும் வசதிகளுடன் கூடிய இந்த சிறிய மருத்துவமனையில், Xray கருவி முதற்கொண்டு, உடனடி சிகிச்சை அளிக்க தேவையான எல்லா வசதிகள் உள்ளன.
மேலும் ட்ரோன் மூலம் மருந்துகள், இரத்தம் முதலான தேவையானவற்றைக் கொண்டு செல்லும் வகையில், இந்த மருத்துவமனையை GPRS மூலம் அருகில் உள்ள கட்டுபாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இவை அனைத்தும் இதில் வைக்கப்பட்டாலும், ஆடாமல் அசையாமல் இருக்கும் வகையில், மிக நேர்த்தியாக இந்த சிறிய மருத்துவமனை வடிவமைக்கப் பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், BHISHM (Bharat Health Initiative for Sahyog, Hita and Maitr) என்ற பெயரில் பீஷ்மா திட்டம், போர்க் கள சுகாதார தகவல் அமைப்பால் உருவாக்கப்பட்டது .
தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் அமைத்த தனிக்குழு இந்தப்பணியில் தீவிரமாக செயல்பட்டது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி ‘ஆரோக்ய மைத்ரி’ திட்டத்தை அறிவித்தார். அறிவித்து ஓராண்டுக்குள், இந்திய விமானப்படை பீஷ்மா திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டி இருக்கிறது.
முதல் முறையாக அயோத்தி இராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது, சுமார் 80 இடங்களில் இவை வைக்கப்பட்டன. தற்போது இதனை சோதனையாக விமானம் மூலம், குறிப்பிட்ட இடத்தில், பாராசூட்கள் மூலம் தரையிறக்கப் பட்டு சோதிக்கப்பட்டது.
இதன் கீழ் இயற்கை பேரழிவுகள் அல்லது மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட எந்தவொரு வளரும் நாட்டிற்கும் இந்தியா மருத்துவ பொருட்கள் உட்பட அத்தியாவசிய தேவைகளையும் உடனடி மருத்துவ சேவைகளையும் வழங்கும் என்பது குறிப்பிடத் தக்கது.
சிறிய மருத்துவமனையில், எந்தப் பொருட்களும் ஒரு சேதம் அடையாமல், குறிப்பிட்ட இடத்தில் இறக்கி, இந்தியா புரிந்த பெரும் சாதனையை உலகமே ஆச்ச்சரியமாக பார்க்கிறது.