கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 நபர்கள் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ஏழு கைத்துப்பாக்கிகள், ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள், வாக்கி டாக்கி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, பெங்களூரு காவல்துறை ஆணையர் பி. தயானந்தா,
பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்பட்டு
சிசிபி அதிகாரிகள், சையத் சுஹேல், உமர், ஜுனைத், முதாசிர் மற்றும் ஜாஹித்
ஆகிய 5 நபர்களைக் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஏற்கனவே 2017ஆம் ஆண்டு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, பார்ப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுயிருந்தனர். சிறையில் இருந்த போது அவர்களுக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. இதன்மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கையாள்வது குறித்து பயிற்சி பெற்றதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து பதிலளித்த கர்நாடக, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை,
இது ஒரு பெரிய சதியின் ஒரு பகுதி என்றும், விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார்.