லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையின் கீழ் உள்ள ரகசிய சுரங்கத்தில் ஹிஸ்புல்லாவின் ரகசிய நிதி மையம் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சுமார் 4200 கோடி ரூபாய் பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி, ஒரு வருடத்துக்கும் மேலாக , மத்திய கிழக்கில் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் ஹமாஸ் மீதும், மற்றொரு புறம் ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தீவிர தாக்குதலை இடைவிடாமல் நடத்தி வருகிறது.
தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா அழைப்பு விடுத்தபோதும், ஹிஸ்புல்லாவின் நிதி ஆதாரங்களை முற்றிலுமாக அழிக்கும் நடவடிக்கைளில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
குறிப்பாக, லெபனான் மக்களுக்கு, அதிலும், ஷியா முஸ்லிம்களுக்கு வட்டியில்லா கடன்கள் மற்றும் வங்கிச் சேவைகளை வழங்கும் அல்-கார்ட் அல்-ஹசன் என்ற ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய வங்கியை குறிவைத்து தாக்குதல் தொடங்கும் என்று ஏற்கனவே இஸ்ரேல் அறிவித்திருந்தது. 1980ம் ஆண்டுகளில் ஒரு தொண்டு நிறுவனமாக தொடங்கப் பட்ட அல்-கார்ட் அல்-ஹசன் வங்கி மீது 2007ம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டில் லெபனானின் நிதிச்சரிவைத் தொடர்ந்து, அல்-கார்ட் அல்-ஹசன் தான் லெபனான் மக்களுக்கான ஒரே வங்கியாகும்.
ஹிஸ்புல்லாவுக்கு நிதி உதவி செய்வதாகவும், வங்கி கிளைகளை ஆயுதகிடங்காக பயன்படுத்தியதாகவும் கூறிய இஸ்ரேல், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல், அல்-கார்ட் அல்-ஹசன் வங்கி உட்பட ஹிஸ்புல்லாவுடன் தொடர்புடைய நிதி மையங்கள் மீது 15-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. கிட்டத்தட்ட ஹிஸ்புல்லாவின் 300 இலக்குகளைக் குறி வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப் பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, பெய்ரூட்டின் புறநகர் பகுதியான Dahiyeh என்று அழைக்கப்படும் அல்-சஹேல் மருத்துவமனையின் கீழ் ஹிஸ்புல்லாவின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லாவுக்குச் சொந்தமான ரகசிய சுரங்கம் உள்ளதாகவும், அதில், 4200 கோடி ரூபாய் பணமும் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கமும் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
இதுவரை இஸ்ரேலால் தாக்கப்படாத இந்த ரகசிய சுரங்கத்தை, நீண்ட கால பயன்பாட்டிற்காக ஹிஸ்புல்லா உருவாக்கி உள்ளதாகவும், இந்த சுரங்கத்தில் தான் லெபனான் குடிமக்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தை ஹிஸ்புல்லா மறைத்து வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
ஹிஸ்புல்லாவின் நிதி மையமாக இருக்கும், ரகசிய சுரங்க பதுங்கு குழியைக் விவரிக்கும் அனிமேஷன் கிராஃபிக் வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
ஈரான் சிரியாவுக்கு எண்ணெய் விற்று வரும் பணத்தை, ஹிஸ்புல்லாவுக்கு கொடுப்பதாகவும்,லெபனானில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு விமானம் மூலம் ஹிஸ்புல்லாவுக்கு, பணம் மற்றும் தங்கம் அடங்கிய சூட்கேஸ்களை அனுப்புவதாகவும், ஹகாரி விவரித்துள்ளார். மேலும், தாஹியேவில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேல் தொடர் எச்சரிக்கைகளை விடுக்கப் பட்டிருக்கிறது.
இஸ்ரேலின் தவறான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக கூறியுள்ள மருத்துவமனையின் தலைவரான ஃபாடி அலமே, லெபனான் ராணுவத்தை வரவழைத்து, தங்கள் மருத்துவமனையை ஆய்வு செய்து, இஸ்ரேலின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை நிரூபிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எந்நேரமும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில், மருத்துவமனை ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் ஃபாடி அலமே கூறியுள்ளார்.
இந்நிலையில், பெய்ரூட் முழுவதும் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும்,லெபனானின் முக்கிய பொது மருத்துவமனையான ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.