தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக திமுக அரசு 2006 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
2001 முதல் 2006 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில், இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கிய நிலையில், அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள், ஆனந்த மகேஸ்வரன், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.