ட்விட்டர் செயலியை ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் 2006-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது . இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். அந்நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்ற அவர், பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தார். பணி நடைமுறைகள் சார்ந்த புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார். பயனாளர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளை அதிகாரப்பூர்வமானதாக மாற்றுவதற்குக் கட்டணம் உட்பட புதிய மாற்றங்களை அவர் அறிவித்தார்.
இந்நிலையில், ட்விட்டரின் “நீலக் குருவி” லோகோவை மாற்ற இருப்பதாக தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
— Elon Musk (@elonmusk) July 23, 2023
கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரின் அடையாளமான நீலக் குருவி லோகோவுக்குப் பதிலாக, எலன் மஸ்க் டோஜ்காயின் கிரிப்டோ கரன்சியின் நாய் படத்தை லோகோவாக வைத்தார். அதையடுத்து மீண்டும் நீலக் குருவியை லோகாவாக திரும்ப வைத்தார். இந்நிலையில், ட்விட்டர் லோகோவை அவர் நிரந்தரமாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டரின் சிஇஓ-வாக, லிண்டா யாக்காரினோவை கடந்த ஏப்ரல் மாதம் நியமித்தார். அப்போது அவர் ட்விட்டரை “எக்ஸ்” நிறுவனமாக மாற்றும் திட்டம் பற்றி குறிப்பிட்டார். அதாவது ட்விட்டரை, சமூகவலைதளம், மெசேஜிங், பணப் பரிவர்த்தனை என அனைத்து செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வகையான செயலியாக மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், ட்விட்டரின் லோகாவை மாற்ற இருப்பதாகவும் ட்விட்டரை சீரமைப்பு செய்ய இருப்பதாக, அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தற்போது, ட்விட்டர் பயனர்களிடையே
கவனத்தை ஈர்த்துள்ளது.