கடந்த மாதம் 20-ம் தேதி முதல் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பான அமளிக்கு மத்தியிலும் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருவதோடு, கேள்வி நேரத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் பதிலளித்து வருகின்றனர்.
அந்த வகையில், விஜய் மல்லையா, நீரவ் மோடி உட்பட வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு, நாட்டை விட்டு தப்பிச் சென்ற பொருளாதாரக் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பண விவரம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடியவர்கள் மொத்தம் 19 பேர். இவர்களில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, ஹிதேஷ் குமார் நரேந்திரபாய் படேல், ஜுனைத் இக்பால் மேமன், ஹஜ்ரா இக்பால் மேமன், ஆசிப் இக்பால் மேமன் ஆகியோர் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற 9 பேரையும் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் பிரகடனம் செய்ய அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருக்கிறது. அதேசமயம், விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து இதுவரை 15,113 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, நாட்டின் பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.