
ஊழலுக்கு எதிராக “என் மண் என் மக்கள்” பாத யாத்திரையின் எட்டாம் நாளான இன்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை மாவட்டம் மேலூரில் மேற்கொண்டார். மேலூரில் அண்ணாமலைக்கு பெருவாரியான மக்கள் வெகு சிறப்பாக உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணாமலை வருகையால் மேலூரே விழாக்கோலம் பூண்டது. தாய்மார்கள் அண்ணாமலைக்குப் பூரணக் கும்ப மரியாதை செய்தனர். ஜல்லிக்கட்டுப் பாரம்பரியத்தை மீட்டெடுத்த பிரதமர் மோடிக்கு, நன்றி சொல்லும் விதமாக ஜல்லிக்கட்டுக் காளைகளுடன் வந்து இளைஞர்கள் வரவேற்பு அளித்தனர்.

அரசியல் நேர்மைக்கு அடையாளமாக வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரரும் முன்னாள் தமிழக உள்துறை அமைச்சருமான கக்கன் பிறந்த ஊரான மேலூரில் பெருந்திரளாகக் கூடி இருந்த பொதுமக்களுக்கு இடையே அண்ணாமலை உரையாற்றினார்.
அப்போது அண்ணாமலை பேசியதாவது,
தமிழகத்தில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளே! தமிழர்கள் அனைவருமே நல்லவர்கள், வல்லவர்கள், ஆற்றல் மிகுந்தவர்கள், ஏதோ ஒரு காரணத்தால் இன்று திராவிட மாயையால் அகப்பட்டு உள்ளார்கள். அவர்களை இதிலிருந்து வெளியே எடுத்து வருவது பாஜகவின் கடமையாக உள்ளது. திமுக சொல்லக்கூடிய பொய்களைத் தோலுரித்து, அது பொய் என்று மக்களுக்குச் சுட்டிக்காட்டி விட்டால் நாம் செய்யக்கூடிய காரியத்தில் பாதி வெற்றி நமக்கு வந்துவிடும். இதுதான் “என் மண் என் மக்கள்” பாத யாத்திரையின் முக்கிய அம்சமாக இருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியை ஒரு பக்கம் பார்க்கிறோம், மறுபக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 மாத கால ஆட்சி காலத்தையும் பார்க்கிறோம். இப்படி இருக்கும் போது பொதுமக்கள் இரண்டையும் பார்த்து யார் நல்லாட்சி செய்கிறார்கள்? யார் மக்களுக்காக வாழ்கிறார்கள்? யார் தம் குடும்பத்துக்காக வாழ்கிறார்கள்? என்பதை மக்கள் பார்த்து தெளிவாகி விடுவார்கள்.
மேலூர் கிராமம் மிகவும் தொன்மையானது. மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமத்திற்கும் தாய் கிராமமாக மேலூர் கிராமம் உள்ளது. விவசாயத்திற்குப் பெற்ற ஊர் மேலூர். இங்கிருந்து தான் மாணிக்கத்தேவர் ஏர் கலப்பையை உருவாக்கினார். அதற்காகத் தொடங்கியது தான் இங்கிருக்கும் போஸ் ஏர்கலப்பை தொழிற்சாலை 60 ஆண்டுகள் கடந்தும் இன்று வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. அதனால் தான், பல்வேறு மாவட்டத்திலிருந்து இங்கே வந்து விவசாயத்திற்கான ஏர் கலப்பையை வாங்கி செல்கிறார்கள். இதுவே இந்த கிராமத்தின் அடையாளமாக உள்ளது.
திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் பிறந்த ஊராகிய திருவாதவூரும், மேலூரில் உள்ளது. தமிழகத்திலே நேர்மையாக, திறமையான ஆற்றல் மிகுந்த ஒரு ஏழை பங்காளனாக, அரசியல் தலைவராக, ஐயா கக்கனை நமக்குக் கொடுத்தது, இந்த மேலூர் தான். கக்கனின் கடைசி காலத்தில் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சாதாரண அறையில் இருந்தார், இதனை பார்த்த எம்ஜிஆர், கக்கனுக்கு உயர் சிகிச்சை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதைக் கக்கன் மறத்துவிட்டார். அதற்குப் பிறகு தான் முன்னாள் அமைச்சர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அப்போதும் கக்கன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை சாதாரண அறையில் தான் கடைசி காலத்தில் மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
கக்கன் காலத்தில் ஆட்சி எப்படி இருந்தது? இன்றைக்கு செந்தில் பாலாஜி காலத்தில் திமுக ஆட்சி எப்படி இருக்கிறது? என்று பாருங்கள். நீதிமன்றத்திலே தீர்ப்பு வரும் வரை, அரசு மருத்துவமனையில் இருந்து தப்பித்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய வழக்கறிஞர்களைக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வாதாடுகிறார். நாம் அனைவரும் அரசு மருத்துவமனையில் சென்று மருத்துவம் பார்க்கிறோம், அங்குச் சிகிச்சை பெறுகிறோம். ஆனால் உச்சபட்ச அதிகாரத்தில் உள்ள முதல்வர் ஸ்டாலினும், திமுகவின் அமைச்சரும் தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர். செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போகாமல், அதைவிட தனியார் மருத்துவமனையே சிறந்தது என அங்குச் செல்கிறார்கள்.
கோடிக்கணக்கான தமிழ்ச் சொந்தங்கள் தினந்தோறும் அரசு மருத்துவமனைக்குச் சென்று வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், ஊழியர்கள் சரியில்லையா? அல்லது திமுக, கோடிக்கணக்கான தமிழ் மக்களை மதிப்பதில்லையா? இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய கால கட்டாயத்தில் திமுக உள்ளது. ஒரு போலியான முகத்திரையைத் திமுக வைத்துக்கொண்டு மக்களுக்கு ஆட்சி செய்வதாக ஏமாற்றி வருகின்றனர்.
கக்கனின் தம்பி விஸ்வநாதன் காவல்துறையில் வேலையில் சேர ஆசை, ஆனால், உள்துறை அமைச்சராக கக்கன் இருப்பதால் சிபாரிசில் வேலை கிடைத்ததாக மக்கள் நினைப்பார்கள் என்பதால் அவரைக் காவல்துறையில் வேலைக்குச் சேர கக்கன் அனுமதிக்கவில்லை. இவ்வாறாக சிறந்த அரசியலை நடத்தியவர்தான் கக்கன்.
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் 45 நாட்களாக அமலாக்கத் துறையின் கண்ணில் படாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். மற்றொரு தம்பி கரூர் கேங், என்று சொல்கிறார்கள். அவர் மாதத்திற்கு 3000 முதல் 4000 கோடி ரூபாய் வரை வசூல் செய்கிறார்.
மேலூரில் பிறந்து வாலிபால் விளையாட்டில் சிறந்து விளங்கி பாரதத்தின் உயரிய விருதான முதல் அர்ஜுனா விருதினைப் பெற்ற
அ. பழனிசாமியின், பெயரில் 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.
வீரத்திற்கும் தியாகத்திற்கும் முக்கித்துவம் தரும் மேலூருக்கு, பாஜக உரிய மரியாதை கொடுக்கும். பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு வெற்றிப்பெற்றுவரும் போது மேலூரில் அ.பழனிசாமி பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய உள் விளையாட்டு அரங்கம் நிச்சயமாகக் கட்டி தரப்படும். இதனை பாஜக அல்லது கூட்டணி கட்சிகள் சார்ந்து வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்து காட்டுவார்கள்.
45 கிலோ மூட்டை ஒரு உர முட்டையின் விலை 260 ரூபாய் என்ற விதத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு உர முட்டையின் உண்மையான விலை ரூபாய் 2200 ஆகும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு ரூ. 260க்கு வழங்குகிறார். இப்படி ஒரு உரமூட்டைக்கு 90 சதவீதம் மானியம் வழங்கக்கூடிய ஒரே பிரதமர் நரேந்திர மோடி, அவர் மீண்டும் பிரதமராக வர வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்கள் சொல்லுங்கள். (கூடி இருந்த மக்கள் வர வேண்டும் வர வேண்டும் என்று உரக்க குரல் கொடுத்தார்கள்.)
தற்போது இந்தியாவுக்கு உரங்கள் இரஷ்யா, உக்ரைன் ஆகிய வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோலை விடவும், உரத்திற்குத் தான் அன்னிய செலவாணி அதிகமாக செலவு செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுய சார்பு உரம், நூறு சதவீதம் தயாரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் உரத்திற்கு மட்டும் மானியமாக 3 லட்சத்தில் 68 ஆயிரத்து 676 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு மோடி அரசு கொடுத்துள்ளது. திமுக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்காக 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது, அதுவும் மத்திய அரசின் உதவித்தொகையில் 2300 கோடி ரூபாயை மடை மாற்றி கொடுக்கிறது.
தமிழகத்தில் 37 லட்சம் விவசாய்கள் தேசிய விவசாய சந்தை (E-NAM) இணையதளம் மூலம் பல மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறார்கள். மத்திய அரசு விவசாயிகளுக்கு பயிர்காப்பிடு ரூ1231 கோடி வழங்கியுள்ளது.
நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசியின் விலை 34 ரூபாய். இதில் மத்திய அரசு 32ரூ, வழங்குகிறது, மாநில அரசு 2 ரூபாய்தான் கொடுக்கிறது. ஆனால் நியாய விலை கடைகளில் முதல்வர் ஸ்டாலினின் படமும் கருணாநிதி படமும் தான் உள்ளது. ஆனால், 32 ரூபாய் தரும் பிரதமர் மோடி படம் இல்லை.
டாஸ்மார்க் 100% மாநில அரசினுடையது தானே, அங்கே ஏன் உங்களுடைய படம் வைக்கவில்லை. அதனால், டாஸ்மார்க் கடைகளிலும் உங்களுடைய படம் வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கிறேன். பாஜக ஆட்சிக்கு வந்த உடன் கள்ளுக்கடைகளை திறக்க உறுதியாக இருக்கிறது. இதில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். கள்ளுக்கடையைத் தமிழகத்தில் திறப்பதால் தமிழகத்தில் யாரெல்லாம் பனைமரம் வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் பணக்காரர்களாக ஆவார்கள்.

திமுக வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக கொண்டுவருவோம் என்று சொன்னார்கள். அதே போல நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி இருக்கிறார்கள். கடன் வாங்கியதில் நம்பர் ஒன் மாநிலமாகத் தமிழகம் உள்ளது. டாஸ்மார்க்கில் நம்பர் ஒன்னாக கொண்டு வந்துள்ளார்கள்.
தமிழகத்தின் மொத்த கடன் 7 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய். இதில் குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1. 75 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. கடன் வாங்கியாய பணம் எங்கே சென்றது.

உதயநிதி ஸ்டாலினும் சபரிஷனும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக பிடிஆர் சொல்கிறார். அந்த ஆடியோ நாம் தான் வெளியிட்டோம். அது வந்த பிறகு அவுருடைய துறை மாற்றப்பட்டது. தற்போது பிடிஆர் நான்கு மாதமாக வாய் திறக்காமல் அமைதியாக உள்ளார்.
செந்தில் பாலாஜி சிறைச்சாலையில் சென்றது சும்மாதான், அடுத்த அமைச்சர் மூர்த்தி தான். மூர்த்தி குவாரிகள் பல நடத்துகிறார், இவ்வளவு குற்றங்கள் செய்தால் சிறைச்சாலை உறுதி.
மதுரையில் நூறு கோடி ரூபாய்க்கு நூலகம் கட்டப்பட்டது. அடுத்து அதை ஒட்டடை அடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் டெண்டர் கொடுப்பார்கள், இதுதான் திமுகவின் திராவிட மாடல். இவ்வாறு எல்லா வகையிலும் ஊழல் செய்யும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 400 எம்பிக்களுடன் மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதி. தமிழகத்தில் இருந்து 40 க்கு 40 வெற்றிப் பெற்று பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்துவதற்கு இந்த என் மண் என் மக்கள் யாத்திரை. இவ்வாறு தமிழக பகக்க மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.