நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பான அமளியால் 10 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் மீதான விவாதம் மக்களவையில் நடந்தது. நேற்று, டெல்லி நிர்வாக சீர்திருத்த திருத்த மசோதா மீதான விவாதம் நடைப்பெற்றது.
இந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் பேசினார்கள். தி.மு.க. சார்பில் பேசிய தயாநிதி மாறன், “கடந்த 25 ஆண்டுகளாக டெல்லியை உங்களால் ஆட்சி செய்ய முடியவில்லை. அந்த ஏக்கம் உங்களிடம் தெரிகிறது.
ஆம் ஆத்மி அரசு மக்களால் தேர்வான அரசு. அவர்களது உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது. பா.ஜ.க. வெல்ல முடியாத இடங்களுக்கு எல்லாம் சி.பி.ஐ., அமலாக்கத்துறையை அனுப்பி அங்குள்ள ஆளுங்கட்சியை உடைத்து, ஆளுங்கட்சி உறுப்பினர்களை உங்கள் பக்கம் இழுத்து வருகிறீர்கள். அதுவரை அவர்கள் ஊழல்வாதிகள். ஆனால், உங்களுடன் இணைந்துவிட்டால் அவர்கள் புனிதர்கள்” என்று பேசினார்.
தயாநிதி மாறன் பேச்சுக்குப் பதிலடி கொடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மரியாதைக்குரிய சபாநாயகர் அவர்களே! நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உரத்த குரலில் பேசியதை நான் கேட்டேன். அவருக்கு டெல்லி பற்றியோ, நாடாளுமன்றம் பற்றியோ கவலை இல்லை. அவருடைய கவலை, பயம் எல்லாம், “என் மண் என் மக்கள் நடைப்பயணம்” தான். அதன் காரணமாக ஏற்பட்ட பயத்தால் கூக்குரல் இடுகிறார் என்று பதிலடி கொடுத்தார்.
இந்த காணொளியை பா.ஜ.க. ஆதரவாளர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.