ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் உலக நாடுகள் பிரதிநிதிகளின் மாநாட்டில் இந்தியா சார்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார்.
உக்ரைன் மீது கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ரஷ்யா போரைத் தொடங்கியது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. கடந்த பிப்ரவரி 24-ம் தேதி நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும், ரஷ்யா வெளியேறாமல் போரை தொடர்ந்து வருகிறது. இதனால், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பலரும் அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். எனவே, போரை நிறுத்த உதவி செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாரதப் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், போருக்கான தருணம் இதுவல்ல என்று புடினிடம் எடுத்துக் கூறினார். அதேபோல, கடந்தாண்டு நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டபோதும், போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புடினிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த போர் காரணமாக, உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவதற்கான முயற்சியில் உலக நாடுகள் இறங்கி இருக்கின்றன. அதன்படி, கடந்த ஜூன் மாதம் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், 10 அம்ச அமைதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
போர் நிறுத்தம், ரஷ்யத் துருப்புக்களை திரும்பப் பெறுதல், உக்ரைன் எல்லைகளை மீட்டெடுத்தல், உணவுப் பாதுகாப்பு, தானிய ஏற்றுமதியை உறுதி செய்தல், அனைத்து கைதிகளையும் விடுவித்தல் மற்றும் அணுசக்தி பாதுகாப்பு ஆகியவை அடங்கும். இந்த 10 அம்ச திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் 2-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை மாநாடு இன்றும், நாளையும் சவூதி அரேபியா உள்ள ஜெட்டா நகரில் நடைபெறுகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துகொள்வார் என்று கடந்த 2 தினங்களுக்கு முன்பு மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி அறிவித்திருந்தார். அதன்படி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்குச் சென்றார். இன்று நடந்த மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.
 
			 
                    















