தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” பாத யாத்திரையின் 9ம் நாளான இன்று மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மத்திய மதுரை மற்றும் மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் தனது நடைப்பயணத்தை பொதுமக்களின் உற்சாக வரவேறப்புகிடையே மேற்கொண்டார்.
அவருக்கு பாஜக தொண்டர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் இந்த நடைப்பயணத்துக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் கலந்து கொண்டனர். 129 மாலைகள் மற்றும் 350 க்கும் சால்வைகள் போர்த்தி கௌரவித்தனர். இதனை மதுரை வடக்கில் பேசும் பேசும் போது இது வந்து அரசியல் கட்சியின் யாத்திரை அல்ல, மக்களுக்கான யாத்திரை. பிரதமர் நரேந்திர மோடி பாரத நாட்டுக்கு செய்த நலதிட்டங்களை குறிப்பாக தமிழத்துக்கு தந்த மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று யாத்திரை. இது ஒரு வேள்வி, இது ஒரு தவம்.
இதில் ஆடம்பரமாக சால்வைகள், பூ மாலைகள் எனக்கு அன்பின் காரணமாக அளிக்கிறீர்கள். இதற்கு செலவாகும் பணத்தை வேறு நல்ல காரணங்களுக்கு செலவழிக்கலாம் என பணிவுடன் சொல்லி கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக மதுரை கிழக்கு தொகுதி போதுமக்கள் இடையே பேசும் போது தமிழக அரசின் ஊழல் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதோடு அல்லாமல் மத்தியில் பிரதமர் மோடியின் ஒன்பதுகால ஆட்சியின் நன்மைகளையும் விளக்கிக் கூறினார்.
இரண்டு ஆட்சிகள் மக்கள் கண்ணில் தெரிகிறது. ஒன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகள் ஆட்சி, இன்னொன்று திமுகவின் 28 மாத கால ஆட்சி. தமிழகத்தில் என்ன தவறு நடக்கிறது என்று பார்த்தால், ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம், என்ற வகையில் மதுரை கிழக்கில் என்ன தவறு நடக்கிறதோ அதே தான் தமிழகம் முழுவதும் நடக்கிறது.
அமைச்சர் மூர்த்தி செய்யாத ஊழலே கிடையாது. பத்திரப்பதிவுத்துறையில் இடமாற்றம் செய்யவும், இடமாற்றம் நிறுத்திவைக்கவும், ஒருத்தரை பணி நீக்கம் செய்யவும், பணி நீக்கத்தை நிறுத்தி வைக்கவும் அவர் பணத்தைப் பெற்றுக்கொள்கிறார். இவ்வாறு விஞ்ஞான முறையில் பத்திரப் பதிவுத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறது.
1963-ல் காமராஜர் ஆரம்பித்து வைத்த சர்க்கரை ஆலை கடந்த மூன்று வருடங்களாக திறக்காமல் உள்ளது. அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணத்திற்கு செலவு செய்த தொகையில், சில கோடிகளை இந்த ஆலையை திறக்க கொடுத்திருந்தால், 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும்.
திமுகவின் பிரச்சினை என்னவென்றால், திமுகவில் தலைமை குடும்பத்தில் இருந்து, கடைசியில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வரை தன்னுடைய குடும்பம் தான் நன்றாக இருக்க வேண்டும், என்பதற்காக மட்டுமே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது பாஜக நடத்தக்கூடிய யாத்திரை என்பதால் ‘என் மண் என் மக்கள்’ உள்ளது. அதுவே திமுக இந்த யாத்திரையை நடத்தி இருந்தால் ‘என் மகன் என் பேரன்’ என்ற பெயரில் யாத்திரை நடத்தி இருப்பார்கள். இப்படிப்பட்ட மிக மோசமான ஆட்சியை திமுக கடந்த 28 மாதங்களாக நடத்திக் கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த 9 ஆண்டுகால பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் மூலம் வழங்கியுள்ளார். 15 லட்சம் பேருக்கு பிரதமரின் வீடு வழங்கப்பட்டுள்ளது. 57 லட்சம் பேருக்கு பிரதமரின் கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 84 லட்சத்து72,510 நபர்கள் மத்திய அரசின் காப்பீட்டில், பதிவு செய்து காப்பீடாக ரூ2.50 லட்சம் பெற்று உள்ளனர்.
பிரதமரின் காப்பீடு திட்டத்தில், 60 வயது கடந்து விவசாயம் செய்பவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசின் பயிர் காப்பீட்டின் மூலம் அதற்கான தொகை வழங்கப்படுகிறது. மேலும் சாமானிய மக்களுக்கும் 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடாக வழங்கப்படுகிறது. 30 லட்சம் பேர் செல்வமகன் சேமிப்பு திட்டத்தில் பயனடைந்துள்ளனர். பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தில் தமிழகத்தில் 2,30,312 பேர் தொழில் ஆரம்பித்துள்ளனர். 5 லட்சம் காப்பீட்டிற்கு, மத்திய அரசு 1694 கோடி ரூபாயை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.முத்ரா திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 2 லட்சத்து 2000 கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
மதுரைக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை வழங்கி உள்ளார். மதுரைக்கு வரக்கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இந்தியாவிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முற்றிலும் மாறுபட்டது. வட இந்தியாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை போல தென்னிந்தியாவிற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2026 மே மாதத்தில் மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முற்றிலுமாக திறக்கப்பட்டு தென்னிந்தியா முழுவதுமே பயன்படும் மருத்துவமனையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கும். இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமகவும் 22,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
1967ஆம் ஆண்டில் இருந்து திமுக ஆட்சியில் இருக்கிறது, ஐந்து முறை மாநிலத்தில் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள், மத்தியில் பலமுறை கூட்டணி கட்சியில் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி யோசிக்கவே இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொடுக்கும்போது, திமுகவினர் குறை சொல்லி வருகிறார்கள்.
27 மாதங்களில் 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்ததாக இந்த மண்ணின் சொந்தக்காரர் அமைச்சர் பி.டி.ஆர் சொல்கிறார். நீங்கள் கொள்ளையடித்த பணத்திலிருந்து அதற்கு ரூ.2000 கோடி கொடுக்க வேண்டியதுதானே?
அலங்காநல்லூரில் சர்க்கரை ஆலையை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறோம், 100 கோடி ரூபாயில் மதுரையில் நூலகம் தேவைப்படுகிறது. அதனை ஒட்டரை அடிக்க இரண்டு கோடி ரூபாய் ஏலம் விடுவார்கள், இது தான் திராவிட மாடல்.
ஊழல் செய்வதற்கு 89 கோடி ரூபாய் செலவில் பேனா சிலை தேவைப்படுகிறது.
இன்றைக்கு பல இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் ஐந்து ஆண்டுகளில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை உருவாக்கி கொடுப்போம் என சொன்னார்கள். கடந்த 28 மாதங்களில் மொத்தமாக வெறும் 2000 பேருக்கு அரசு வேலை வாய்ப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வாக்குறுதிப்படி இரண்டு வருடத்திற்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் அரசு வேலை வாய்ப்புகள் கொடுக்க வேண்டும், ஆனால் இதுவரை 2000 அரசு வேலை வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடி 5 லட்சத்து 40 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளார். இன்னும் வரக்கூடிய ஒரு வருடத்தில் கண்டிப்பாக மீதமுள்ள 4லட்சம் 60 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி விடுவார்.
நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு வங்கி அமைக்கப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்த நிலையில் 27 மாதங்கள் ஆகியும் ஒரு செங்கல் ஆவது வைத்தீர்களா? விசைத்தறி நெசவாளர்களிடம் தான் பள்ளி குழந்தைகளுக்கான சீருடைகள் கொள்முதல் செய்யப்படும் என சொன்னதை செய்தீர்களா? நூல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று சொன்னீர்கள், செய்தீர்களா? சொன்ன வாக்குறுதியை எதையுமே திமுக செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, கேட்காமலேயே விருதுநகர் மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா வழங்கியுள்ளார். வருகின்ற ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இங்கு உருவாக்கப்பட உள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 2000 செவிலியர்களின் தேவை, ஆனால் தற்போது, 670 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். 1330 செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் சென்னையிலோ செவிலியர்கள் போராடி வருகின்றனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை, ஆனால் சென்னையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த, ஆசிரியர்கள் தங்களுக்கு அரசு வேலை வழங்கும் படி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திராவிட மாடல் ஆட்சி, வெறும் அறிக்கையில் மட்டுமே சொல்வார்கள், எதையுமே செய்ய மாட்டார்கள். தமிழ்நாட்டில் திமுகவை பொறுத்தவரை கமிஷன், கரெப்க்ஷன் கலெக்சன் அவ்வளவு தான் .
இந்த தொகுதியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளார், காலை, மதியம், மாலை என மோடி புராணம் பாடுகிறார். காவிரியில் இருந்து ஜூலை மாதத்திற்கு 31 டிஎம்சி தண்ணீர் வந்திருக்க வேண்டும். எதற்காக தண்ணீர் திறக்கவில்லை என இங்கு உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேட்டாரா? கேரளாவில் இருந்து தென்காசி, தேனி, கம்பத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன, இதைப் பற்றி இங்கிருக்கும் கம்யூனிஸ்ட் எம்.பி மருத்துவக் கழிவுகளை இங்கே ஏன் போடுகிறீர்கள்? என கேரளா கம்யூனிஸ்ட் பார்த்து கேட்டாரா?
கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள். அவர்களால் அவர்களுக்கும் பிரயோஜனமில்லை, நாட்டிற்கும் பிரயோஜனமில்லை. மதுரை போன்று வேகமாக வளரும் நகருக்கு நரேந்திர மோடியை சார்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேவை.
24 மணி நேரமும் இயங்கும் தூங்கா நகரமாக மதுரை உள்ளது. இந்த நகரம் 24 மணி நேரமும் வேலை செய்ய வேண்டும் என்றால் பாஜக கூட்டணியில் உள்ள தேசிய ஜனநாயக கட்சிகள் இங்கு நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என தெரிவித்தார்.