அமலாக்கத்துறை விசாரணை நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு, வரும் 25-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதையடுத்து, அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
2011 – 16 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமானோரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த 2 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்த நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில், மறு விசாரணை நடந்து வருகிறது.
இந்த சூழலில், பண மோசடி தொடர்பாக கடந்த மே மாதம் செந்தில் பாலாஜி வீடு உள்பட பல்வேறு இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர், அப்போது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதோடு, அவர்களது வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தினர். இது ஒருபுறம் இருக்க, பண மோசடி விவகாரத்தில் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, செந்தில் பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக் குமாருக்கும் அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், இருவருமே ஆஜராகவில்லை.
இதையடுத்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் கடந்த மாதம் 13-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனடிப்படையில், 14-ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது, நெஞ்சுவலி, அறுவைச் சிகிச்சை, ஆட்கொணர்வு மனு என பல சம்பவங்கள் அரங்கேறியது. இதனால், இலாகா இல்லாத அமைச்சரானார் செந்தில் பாலாஜி.
பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். அவரை, அமலாக்கத்துறை கடந்த 7-ம் தேதி காவலில் எடுத்து விசாரித்து வந்தது . அப்போது, அதிகாரிகள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு, தெரியாது என்றும், எனக்கு தொடர்பில்லை எனவும் அவர் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், 5 நாள் விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜியை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
மேலும், அவரிடம் 5 நாட்கள் நடத்திய விசாரணை குறித்த குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, வரும் ஆகஸ்ட் 25-ம் தேதிவரை, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.