நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், மக்களவையில் 22 மசோதாக்களும், மாநிலங்களவையில் 25 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. அதேசமயம், மக்களவை மற்றும் மாநிலங்களவை அனுமதியுடன் 1 மசோதா திரும்பப் பெறப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது. ஆனால், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால், 23 நாட்கள் அமர்வில் 17 அமர்வுகள் நடந்தன. எனினும், எதிர்கட்சிகளின் அமளிக்கு மத்தியிலும் அவ்வப்போது சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த வகையில், மக்களவையில் 20 மசோதாக்களும், மாநிலங்களவையில் 5 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இம்மசோதாக்களில் இரு அவைகளிலும் சேர்த்து மொத்தமாக 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, மக்களவையில் 22 மசோதாக்களும், மாநிலங்களவையில் 25 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அனுமதியோடு 1 மசோதா திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.
இம்மசோதாக்களில், டெல்லி தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டத் திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா, கடலோரப் பகுதிகள் கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதா, பத்திரிகை மற்றும் பத்திரிகை பதிவு மசோதா, அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, மருத்தகம் திருத்த மசோதா, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, தேசிய நர்சிங், மருத்துவச்சி ஆணைய மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, ஒளிப்பதிவு திருத்த மசோதா, கடலோர மீன்வளர்ப்பு ஆணைய திருத்த மசோதா, வன பாதுகாப்பு திருத்த மசோதா உள்ளிட்டவை அடங்கும்.
இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்தின் மீதான விவாதம் 20 மணி நேரம் நடந்தது. இவ்விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் மத்திய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இதற்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாரான், கிரண் ரிஜூஜி, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பலரும் பதிலடி கொடுத்தனர்.
நிறைவாக, நேற்று மாலை பாரத பிரதமர் நரேந்திர மோடி, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கு விளக்கம் அளித்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றினார். பிரதமர் பேசிக் கொண்டிருக்கும்போதே, எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பிரதமர் பேசி முடித்த பிறகு, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து உரையாடினர்.