நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரில் நாளை பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணி நடைபெறும் என்று, அம்மாநில காவல்துறை தலைமை இயக்குனர் தில்பாக் சிங் தெரிவித்திருக்கிறார்.
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை வீடுதோறும் தேசியக் கொடியேற்றி, அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடும்படி, நாட்டு மக்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். எனவே, நாட்டு மக்களுக்கு தட்டுப்பாடின்றி தேசியக்கொடி கிடைக்கச் செய்யும் வகையில், நாடு முழுவதுமுள்ள அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,800 சிறப்பு விருந்தினகள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடுவது தொடர்பாக, கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையிலும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை தலைமை இயக்குனர் தில்பாக் சிங், “நாட்டின் 75-வது சுதந்திர தினத்தின் நிறைவு விழாவை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 13-ம் தேதி (நாளை) பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணி நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக, சுதந்திர விழா பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, வடக்கு ஜம்மு காஷ்மீரின் ஃப்ரான்டையர் மாவட்டம் குப்வாரா பகுதியில், இராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில போலீஸார் ஆகியோர் கொண்ட கூட்டு நடவடிக்கை குழுவினருடன், காவல்துறை தலைமை இயக்குனர் தில்பாக் சிங், ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர், மாநிலத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட காவலர்களின் நினைவாக கட்டப்பட்ட புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தார்.