நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்துகொண்டு, எதிர்க்கட்சிகள் பாதியிலேயே ஓடி விட்டன என்று பாரத பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் வியூகங்கள் அமைப்பது தொடர்பாக, மேற்குவங்க மாநிலம் கிழக்குப் பகுதிக்கான பா.ஜ.க. நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்து வருகிறது. பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமை வகிக்க, அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், காணொளி காட்சி வாயிலாகப் பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, “மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல், பா.ஜ.க. வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பா.ஜ.க. வேட்பாளர்களை மிரட்டியதோடு, வாக்காளர்களையும் மிரட்டனர்.
மேலும், வாக்குச்சாவடிகளையும் கைப்பற்றி, அராஜகத்தில் ஈடுபட்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரத்தக்களரி அரசியலை பின்பற்றுகிறது. மேற்கு வங்கத்தில் ரத்த அரசியல் விளையாட்டு நடத்துகிறது. இதுதான் அவர்களின் அரசியல் நாகரிகம் போல் தெரிகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை தோற்கடித்து, நம்மைப் பற்றி நாடு முழுவதும் எதிர்மறை கருத்துக்களை பரப்பியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்து கொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாதியிலேயே ஓடி விட்டனர்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பான விவாதத்தையும் முடக்கி விட்டனர். மணிப்பூர் மக்களின் வலியை எதிர்க்கட்சிகள் உணரவில்லை. தங்களது அரசியல் ஆதாயத்திற்காக மணிப்பூரை சூறையாடி இருக்கிறார்கள். மணிப்பூரை வைத்து அரசியல் செய்தார்களே தவிர, அம்மக்கள் மீது எதிர்க்கட்சிகளுக்கு துளியும் அக்கறை இல்லை. இதனால்தான், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியவர்கள், மணிப்பூரை பற்றி மட்டும் பேசவில்லை” என்று எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.