ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியாவும் மலேசியாவும் மோதுகிறது.
சென்னை இராதாகிருஷ்ணன் மைதானத்தில், 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஹாக்கி தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்தியா முதல் இடத்திலும், இரண்டாம் இடத்தில் மலேசியாவும், மூன்றாம் இடத்தில் தென் கொரியாவும்,நான்காம் இடத்தில் ஜப்பானும் அரையிறுதிக்கு முன்னேறின.
நேற்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தென்கொரியாவுடன் , மலேசியா மோதியது. இதில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய மலேசியா அணி 6-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதேபோல், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும் ஜப்பான் அணியும் மோதின. அதில் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக விளையாண்ட இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்க உள்ள இறுதி போட்டியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன. மலேசியா அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி வந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
இந்திய ஹாக்கி அணி தான் வெற்றிப் பெறுமா? எதிர்பார்ப்புடன் இந்திய ஹாக்கி இரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.