சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கன்பத் பாலம், தேசியக் கொடியின் மூவர்ணத்தில் ஜொலிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்று, 76-வது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றி, அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடும்படி, பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, நேற்று முதல் நாட்டு மக்கள் தேசியக்கொடி ஏற்றி, புகைப்படம் எடுத்து ஹர் ஹர் திரங்கா (https://harghartiranga.com/) இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
மேலும், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன. அந்த வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மூவர்ணக்கொடி பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அதேபோல, தலைநகர் டெல்லியில் மூவர்ணக்கொடி பேரணியை மத்திய இணையமைச்சர் மீனாட்சி லோகி தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் 400 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணி நேற்று தொடங்கியது. இராணுவம் மற்றும் மாநில காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பேரணியில் ஏராளமான மாணவர்களும், கிராம மக்களும் கலந்துகொண்டனர். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள கன்பத் பாலம் மூவர்ணத்தில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதன் வழியாக மூவர்ணக்கொடி பேரணி சென்றது. அப்போது, மூவர்ண அலங்கார விளக்குகளால் கன்பத் பாலம் ஜொலித்தது, காண்போர் மனதைக் கொள்ளை கொண்டது.