டெல்லியிலுள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்ற பெயரை, பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று மத்திய அரசு பெயர் மாற்றம் செய்திருக்கிறது.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ இல்லமாக டெல்லியிலுள்ள தீன் மூர்த்தி பவன் செயல்பட்டு வந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு, இதை நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றிய முந்தைய காங்கிரஸ் அரசு, அதற்கு நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று பெயர் சூட்டியது.
இந்த நிலையில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது, இந்தப் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்பது இனி பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்று அழைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது, பெயர் மாற்றம் செய்வதற்குக் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த 11-ம் நூலகச் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் மீண்டும் நடந்தது. சங்கத்தின் துணைத் தலைவரான ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், நூலக சங்கத்தின் தலைவரும், நிர்வாகக்குழு உறுப்பினருமான நிருபேந்திர மிஸ்ரா, “பெயர் மாற்றம் செய்வது ஜனநாயகத்தின் மீதான தேசத்தின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், “நேரு முதல் மோடி வரை அனைத்து பிரதமர்களின் பங்களிப்புகளையும், எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு அவர்கள் அளித்த பதிலையும் இந்நிறுவனம் வெளிப்படுத்துவதால், பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்கிற பெயர் மாற்றம் செய்வது கட்டாயம்” என்று கூறினார்.
இதையடுத்து, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டதாக நூலக சங்க நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர், தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அப்பதிவில், “சமூகத்தின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் பல்வகைப்படுத்துதலுக்கேற்ப நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், 2023 ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் பிரதம மந்திரிகள் நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று அறியப்படும். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அப்பதிவில் தீன் மூர்த்தி பவன் படத்தை இணைத்திருந்த அவர், பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரையும் டேக் செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.