பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், சாட்சி விசாரணை இன்று தொடங்கி இருக்கிறது. இதனால், பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டுவரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கூடுதலாக கனிமவளத்துறையையும் கவனித்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூந்துறை கிராமத்தில் முறைகேடாக செம்மண் குவாரியை ஏலம் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அந்த செம்மண் குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, கூடுதலாக செம்மண்ணை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, பொன்முடி, அவரது மகன் கௌதமசிகாமணி, ஜெயச்சந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன், ராஜமகேந்திரன் ஆகிய 8 பேர் மீது 2012-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி, கௌதமசிகாமணியைத் தவிர மற்றவர்கள் ஆஜராகினர்.
அதேபோல, புகார்தாரரான ஓய்வுபெற்ற வானூர் வட்டாட்சியர் குமரபாலனும் உடல்நலக் குறைவு காரணமாக ஆஜராகவில்லை. எனவே, குமரபாலனிடம் காணொளி வாயிலாக விசாரணை நடத்தும் வகையில், வழக்கு விசாரணையை 16-ம் தேதிக்கு நீதிபதி பூர்ணிமா ஒத்திவைத்தார். அதன்படி, இன்று வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, அரசுத் தரப்பு சாட்சியான குமரபாலன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணை சூடுபிடித்திருக்கிறது. இதனால், அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, சொத்துக் குவிப்பு வழக்கில், பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூர் நீதிமன்றம் விடுவித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணையை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.