வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில், எண்ணெய் வளம் மிக்க ஒன்றான லிபியாவில் அதிபர் கடாஃபி தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு நேட்டோ படையினரின் ஆதரவுடன் புரட்சி வெடித்தது. இதில் கடாஃபி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்நாட்டில் உள்நாட்டுக் கலவரம் தொடர்ந்து வருகிறது.
அதாவது, தலைநகர் திரிபோலியை மையமாகக் கொண்டு பிரதமர் அப்துல் ஹமீத் பெய்பா தலைமையில் ஒரு அரசு நடந்து வருகிறது. அதேசமயம், சிர்ட் கடற்கரை நகரை மையமாக வைத்து ஃபாதி பகாஷா என்பவர் தலைமையில் போட்டி அரசு ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர், தன்னை பிரதமராக அறிவித்து செயல்பட்டு வருகிறார்.
இந்த இருவருமே தனித் தனியாக போராளிக் குழுவை வைத்திருக்கிறார்கள். இந்த இருக்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடக்கும், இது தவிர, முன்னாள் ராணுவத் தளபதி ஹைதாம் தஜோரி தலைமையிலான புரட்சியாளர்கள் படையணி என்னும் போராளிக் குழுவும், அப்தெல் கனி அல் கிக்லி தலைமையிலான மற்றொரு போராளிக் குழுவும் உள்ளன.
இக்குழுக்கள் அடிக்கடி மோதிக் கொள்வதன் காரணமாக, லிபியாவில் உள்நாட்டு கலவரம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இப்போராளிக் குழுக்களின் மோதல்களில், போராளிகளில் பலர் உயிரிழப்பதோடு, அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில், திரிபோலியில் நேற்று இரு சக்தி வாய்ந்த குழுக்களுக்கிடையே நடந்த ஆயுதத் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 106 பேர் படுகாயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
444 படைப்பிரிவின் தளபதியாக இருப்பவர் மஹ்மூத் ஹம்சா. இவர், கடந்த 14-ம் தேதி விமானம் ஏறுவதற்காக, தெற்கு லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள முக்கிய விமான நிலையமான மிட்டிகாவுக்கு வந்திருக்கிறார். ஆனால், விமான நிலையத்தில் இருந்த சிறப்புத் தடுப்புப் படையினர், மஹ்மூத் ஹம்சாவை விமானம் ஏறவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு, கைதும் செய்தனர்.
இத்தகவல் மளமளவென 444 படைப்பிரிவினருக்குப் பரவியது. இதையடுத்து, அன்றைய தினம் இரவு விமான நிலையத்தில் குவிந்த 444 படைப்பிரிவினர், சிறப்புத் தடுப்புப் பிரிவினர் மீது ஆயுதத் தாக்குதல் நடத்தினர். இதற்கு சிறப்புப் படைப் பிரிவினரும் பதிலடி தாக்குதல் கொடுத்தனர். இதனால், விமான நிலையம் அமைந்திருந்த பகுதியே போர்க்களம்போல காட்சியளித்தது.
இதைத் தொடர்ந்து, ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒற்றுமை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் ஏற்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து நேற்று மோதல்கள் நிறுத்தப்பட்டன. இச்சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இவர்களில் அப்பாவி பொதுமக்களும் அடங்குவர். அதேபோல, 106 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்களிலும் ஏராளமானோர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.