இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீப், நீண்ட காலமாக உடல் நலக்குறைவால், ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை காலமானார்.
ஜூலை 17, 1949 இல் பிறந்த இவர் இந்தியச் சார்பில் 35 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி உள்ளார். குறிப்பாக, 1970 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றதில் முக்கிய பங்காற்றியவர். இதன் பின்னர் பிரபல இந்தியக் கால்பந்தாட்ட வீரராக விளங்கினார்.
1971ம் ஆண்டு தென் வியட்நாம் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணி கோப்பையைப் பெறுவதற்குப் பெரும் பங்காற்றியவர் முகமது ஹபீப். பின்னர், 1975 வரை சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் விளையாடினார். இவருடைய சிறந்த பங்களிப்பைப் பாராட்டி அர்ஜுனா விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
ஓய்வுக்குப் பிறகு இந்திய அணிக்குப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். அவரது மறைவுக்கு அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.