நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நவரத்னா பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா லிமிடெட் (நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்), 300 மெகாவாட் சூரிய மின்சக்தியை வழங்குவதற்காக ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் நீண்ட கால மின் பயன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்நிறுவனம் 510 மெகாவாட் சூரிய மின் திட்டத் திறனைப் ஏலத்தின் மூலம் பெற்றுள்ளது. ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்தில் உள்ள பர்சிங்சாரில் 300 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி திட்டத் திறன் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் ஏலம் மூலம் டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு ராஜஸ்தான் மாநிலத்திற்கு சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்கான இந்த ஒப்பந்தம், என்.எல்.சி இந்தியா லிமிடெட், ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் இடையே 2023 ஆகஸ்ட் 17 அன்று ஜெய்ப்பூரில் கையெழுத்தானது. இதில் ராஜஸ்தான் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் இயக்குநர் (நிதி) டி.கே.ஜெயின், என்.எல்.சி இந்தியா லிமிடெடின் பொது மேலாளர் டி.பி.சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 750 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மொத்தப் பசுமை மின்சாரமும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வழங்கப்படும். இத்திட்டம் ராஜஸ்தான் மாநிலத்தின் புதுப்பிக்கத்தக்க மின்சாரக் கொள்முதல் இலக்குகளை அடைய உதவும்.
இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஒவ்வொரு ஆண்டும் 0.726 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் தற்போதுள்ள 1.40 ஜிகாவாட் உற்பத்தித் திறனைத் தவிர, என்எல்சிஐஎல் இந்தத் திறனை மற்ற மாநிலங்களில் விரிவுபடுத்துவது இதுவே முதல் முறையாகும். என்.எல்.சி.ஐ.எல் தற்போது 1,421 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் கார்ப்பரேட் திட்டத்தின்படி, 2030-க்குள் 6,031 மெகாவாட் திறனை நிறுவ திட்டமிட்டுள்ளது.