இந்தியாவின் விண்வெளித்துறையில் வரும் ஆண்டுகளில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக இருக்கும் என்று மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியவர், பிரக்யான் ரோவரை சுமந்து செல்லும் விண்கலத்தின் “விக்ரம்” லேண்டர் தொகுதி, சந்திர பயணத்தில் உந்துவிசை தொகுதியிலிருந்து வெற்றிகரமாக தன்னை விடுவித்துக் கொண்டது.
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய உலகின் நான்காவது நாடாக இந்தியா இருக்கும். ஆனால் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியாதான் இருக்கும் என்று கூறினார்.
ஆகஸ்ட் 23, 2023 அன்று மாலை 5.30 மணி முதல் 6.00 மணிக்குள் சந்திரயான் -3 பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரும், உலகமும், ஒவ்வொரு தருணத்தையும் உற்று நோக்குகிறது என்று கூறினார்.
சந்திரயான் -3 என்பது சந்திரயான் -2 இன் தொடர்ச்சியான பணியாகும், மேலும் நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கம் மற்றும் ரோவிங் செய்வதில் இந்தியாவின் திறனை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் நுழைவதற்குத் தேவையான அனைத்தும் மிகவும் துல்லியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் -3 வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகு, ஆறு சக்கரங்களைக் கொண்ட ரோவர் வெளியே வந்து சந்திரனில் 14 நாட்கள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோவரில் உள்ள பல கேமராக்களின் உதவியுடன், படங்களைப் பெற முடியும். தற்போதைய வளர்ச்சிப் பாதையின் அடிப்படையில், இந்தியாவின் விண்வெளித் துறை வரும் ஆண்டுகளில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக இருக்கும் என்றார். சந்திரயான் -3 திட்டத்தின் முதன்மை நோக்கங்கள் மூன்று, நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மெதுவாக தரையிறக்கத்தை நிரூபிப்பது; நிலவில் ரோவர் சுற்றி வருவதைக் காட்டுதல், உள் அறிவியல் சோதனைகளை நடத்துதல், எனக் கூறினார்.