மியான்மர் சென்ற 212 மெய்டியினர் பாதுகாப்பாக நம் நாட்டுக்கு திரும்பி உள்ளனர், இதற்காக ராணுவத்திற்கு தனது பாராட்டை மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் கூறியுள்ளார்.
மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக, மெய்டி – கூகி பிரிவினரிடையே, கடந்த மே 3ல் மோதல் உருவானது. அங்கு மூன்று மாதங்களுக்கு மேலாக மாநிலம் முழுதும் நடந்து வரும் வன்முறை சம்பவங்களில், 160க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில் மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்ப மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, மீண்டும் அமைதி திரும்பியது.
கடந்த மூன்று மாதங்களாக நடந்து வரும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மெய்டி சமூகத்தினர் சிலர், நம் அண்டை நாடான மியான்மரில் தஞ்சம் அடைந்தனர். மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, அங்குச் சென்ற 212 மெய்டி சமூகத்தினர், ராணுவத்தினர் உதவியுடன் நேற்று மணிப்பூர் திரும்பினர்.
இது குறித்து முதல்வர் பைரோன் சிங் கூறுகையில், “மணிப்பூரில் உள்ள மோரே நகரில், மே 3ல் நடந்த அமைதியின்மைக்குப்பின் பாதுகாப்பு தேடி மியான்மர் சென்ற 212 மெய்டியினர் பாதுகாப்பாக நம் நாட்டுக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்ப முயற்சிகள் மேற்கொண்ட ராணுவத்தினருக்கு பாராட்டுகள்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ருல் மாவட்டத்தில் உள்ள கூகி தோவாய் கிராமத்தில், நேற்று முன்தினம் அதிகாலை இரு சமூகத்தினரிடேயே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மெல்ல இயல்பு நிலைக்கு மாறி வந்த மணிப்பூரில், இளைஞர்களின் கொலை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, காங்போக்பி மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான பெண்கள் கடந்த இரு தினங்களாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அமைதியை மீட்டெடுக்க, மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.