இமாச்சலப் பிரதேசத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று ஆய்வு செய்தார். அவருடன் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரும் உடனிருந்தார்.
இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனால், அங்கு கனமழை பெய்து வருகிறது. இது தவிர, திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி வருகிறது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழை வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அதேபோல, சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கோவில் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், வெள்ளத்தில் 2,022 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்திருப்பதாகவும், 9,615 வீடுகள் பாதியளவுக்கு சேதமடைந்திருப்பதாகவும், 113 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, ஒட்டுமொத்த மாநிலத்தையும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கும் இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு, மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக, டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, நாளை காலை (இன்று) ஜெ.பி.நட்டா இமாச்சலப் பிரதேசத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருடன் சிம்லாவின் அன்னடேல் ஹெலிபேட் தளத்திற்கு வந்தடைந்தார்.
தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.பி.நட்டா, “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டேன். இயற்கை பேரிடர் ஏற்படுத்திய பாதிப்பை எண்ணி மிகவும் வருந்துகிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து, சிர்மௌர் மாவட்டத்திலுள்ள பௌண்டா சாஹிப் சென்று மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட ஜெ.பி. நட்டா, சிர்மௌரி தால், கச்சி தாங் ஆகிய கிராமங்களுக்கும் சென்று, மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர், நிலச்சரிவு மற்றும் கோவில் இடிந்து விழுந்த சிம்லாவின் சம்மர் ஹில் பகுதிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, சிம்லா மற்றும் பிலாஸ்பூர் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து நிவாரணம், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து விவாதித்தார்.