உத்தரப் பிரதேசத்தில் விடுதியில் இருந்து 2 துப்பாக்கிகள், 30 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்திலுள்ள விடுதி ஒன்றில் அறை எண் 57-ல் 2 சிறுவர்கள் தங்கி இருந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே நேற்று நள்ளிரவில் திடீரென மோதல் ஏற்பட்டு, கைகலப்பாக மாறி இருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காவல்துறையினரைக் கண்டதும், இரு சிறுவர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அந்த அறையை சோதனை செய்தனர். அப்போது, அந்த அறையில் 2 கைத்துப்பாக்கிகளும், 30 வெடிகுண்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜுபால் என்பவர் கடந்த 2005-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை கொலை செய்தது அம்மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், மிகப்பெரிய தாதாவுமான சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ஆதிக் அகமது. இக்கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் வழக்கறிஞர் உமேஷ் பால் யாதவ். இவரும், கடந்த பிப்ரவரி மாதம் ஆதிக் அகமது ரவுடி கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இவரது கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி ஒருவரை, இதே விடுதியில் இருந்துதான் காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இச்சிறுவர்களுக்கும் உமேஷ் பால் யாதவ் கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதேசமயம், இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆதிக் அகமதுவின் மகனை காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்தனர். அதேபோல, ஆதிக் அகமதுவையும் கடந்த மே மாதம் மர்ம கும்பல் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.