விண்கலத்தை நகர்த்தும் போது ஏற்பட்ட விலகல் காரணமாக நிலவின் மேற்பரப்பில் லூனா-25 மோதியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை லூனா-25 விண்கலம் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் முயற்சியில் ரஷ்ய விண்வெளி நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டது. இந்நிலையில், தற்போது லூனா-25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி நொருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து ஆகஸ்ட் 10-ஆம் தேதி விண்ணுக்கு ஏவியது.
கடந்த புதன்கிழமை நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 21-ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் லூனாவை தரையிறக்கத் திட்டமிட்டிருந்தது. இது கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்காலம் நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கு ரஷ்யாவால் அனுப்பட்டது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்குப் பின் ரஷ்யா நிலவுக்கு அனுப்பிய விண்கலம் லூனா-25 ஆகும். இந்த முயற்சி தற்போது, தோல்வியில் முடிந்துள்ளது.
இது குறித்து ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் வெளியிட்ட அறிக்கையில், நிலவில் தரையிறக்குவதற்கு விண்கலத்தை நகர்த்தும் போது ஏற்பட்ட விலகல் காரணமாக நிலவின் மேற்பரப்பில் லூனா-25 மோதியதாக தெரிவித்துள்ளது.