சிறையில் எனது கணவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. ஆகவே, அவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி, பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
2018 முதல் 2022-ம் ஆண்டுவரை பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியுடன் கூட்டணியில் இருந்த முக்கியக் கட்சி, எதிர்கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆட்சி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் மீது ஊழல், முறைகேடு, மோசடி, கொலை மிரட்டல் உள்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் முக்கியமானது தோஷகான எனப்படும் பரிசுப் பொருட்கள் ஊழல்.
அதாவது, இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, உலகத் தலைவர்கள் பலரும் பரிசாக வழங்கிய பொருட்கள் அரசு கஜானாவில் சேர்க்காமல், வெளிநபர்களுக்கு விற்று பணமாக்கி, அதை மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்பது நிரூபணமான நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக கைது செய்யப்பட்ட இம்ரான் கான், பஞ்சாப் மாகாணத்திலுள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்தச் சூழலில், கடந்த 10-ம் தேதி இம்ரான்கானை சிறையில் சந்தித்த அவரது மனைவி புஷ்ரா பீவி, சுமார் அரை மணி நேரம் பேசிவிட்டு வந்தார். அப்போது, செய்தியாளரிகளிடம் பேசிய புஷ்ரா பீவி, தனது கணவர் மிகவும் மோசமான நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், சி கிளாஸ் வசதி மட்டுமே செய்து தரப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், இவ்வளவு சிரமங்கள் இருந்தபோதிலும், இம்ரான் மன உறுதியுடன் இருப்பதாகவும், தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கத் தயாராக இருப்பதாகவும், எக்காரணத்துக்காகவும் அடிமைத்தனத்துக்கு அடிபணிய மாட்டார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான், சிறையில் தனது கணவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், சிறையை மாற்ற வேண்டும் என்றும் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி பஞ்சாப் மாகாண உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், “எவ்வித நியாயமும் இல்லாமல் எனது கணவர் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நீதிமன்ற உத்தரவின்படி எனது கணவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும். மேலும், எனது கணவர் அரசியல்வாதி மட்டுமல்ல, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர். அதோடு, நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்.
ஆகவே, அவரது சமூக மற்றும் அரசியல் அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு, அவருக்கு சிறையில் பி கிளாஸ் வசதிகளை வழங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த காலங்களில் எனது கணவரை கொலை செய்ய 2 முறை முயற்சி நடந்தது. இதில் தொடர்புடையக் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஆகவே, எனது கணவர் உயிருக்கு இன்னும் ஆபத்து இருக்கிறது. சிறையிலே கூட எனது கணவர் விஷம் வைத்துக் கொள்ளப்படலாம் என்கிற அச்சம் நிலவுகிறது. எனவே, வீட்டில் சமைத்த உணவை எனது கணவருக்கு வழங்க அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இம்ரான் கான் மனைவி புஷ்ரா பீவி மீதும் தோஷகானா வழக்கு உள்ளது என்பதும், இதன் காரணமாக அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.