இந்தியாவின் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்திருப்பதாகக் கூறிய ராகுல் காந்திக்கு, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், பா.ஜ.க. எம்.பி. சுதன்ஷு திரிவேதி ஆகியோர் பதிலடி கொடுத்திருக்கின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, கடந்த ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குச் சென்றிருந்தார். அப்போது, அங்குள்ள லால் சௌக்கில் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து மூவர்ண தேசியக்கொடியே ஏற்றியவர், இந்தியாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று கூறினார்.
அதேபோல, கடந்த பிப்ரவரி மாதம் தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் மீண்டும் ஜம்மு காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி, குல்மார்க்கில் பனிச்சறுக்கு வாகனத்தில் ஜாலியாக வலம் வந்தார். இந்த சூழலில், தற்போது லடாக் யூனியன் பிரதேசத்திற்குச் சென்றிருக்கும் ராகுல் காந்தி, லே-யிலிருந்து பாங்காங் ஏரிக்கு இரு சக்கர வாகனத்தில் ஜாலியாக சென்றார். ஆனால், அங்கு பேட்டியளிக்கும்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து விட்டதாகக் குற்றம்சாட்டினார்.
இதற்குத்தான் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானும், பா.ஜ.க. எம்.பி. சுதன்ஷு திரிவேதியும் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இதுகுறித்து பேசிய தர்மேந்திர பிரதான், “ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரமான ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக்கில் ராகுலும், காங்கிரஸ் தலைவர்களும் மூவர்ணக் கொடியை ஏந்தியதையும், மோடி கட்டமைத்த லடாக்கின் பளபளக்கும் சாலைகளில் ராகுல் காந்தி கவலையின்றி இரு சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுவதையும் பார்ப்பது நன்றாகத்தான் இருக்கிறது.
2014-ம் ஆண்டுக்கு முன்பு, காஷ்மீரில் உள்ள லால் சௌக்கில் தேசியக்கொடியை ஏற்றி வைத்துவிட்டு, லடாக்கை தரிசு நிலம் என்று ஜவஹர்லால் நேரு கூறினார். அதே லடாக்கில் ஒரு நாள் ராகுல் காந்தி தேசியக்கொடியை ஏற்றி மகிழ்வார் என்று யாராவது நினைத்துப் பார்த்திருக்க முடியுமா? நான் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுகிறேன். 2014-ம் ஆண்டுக்கு முன்பு லால் சௌக்கில் ராகுல் காந்தி மூவர்ணக் கொடியை ஏற்றிய அல்லது லடாக்கில் அச்சமும் கவலையும் இல்லாமல் சுற்றித் திரிந்த படத்தைக் காட்டுங்கள்” என்று கேள்வி எழுப்பியவர், “இதற்காகவாவது காங்கிரஸ் கட்சியினர் குறைந்தபட்சம் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.
அதேபோல, ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ஜ.க. எம்பி. சுதன்ஷு திரிவேதி, “இராணுவத்தின் அறிக்கைக்கு எதிராக ராகுல் காந்தி இதுபோன்ற கருத்தை தெரிவிப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. கடந்த காலங்களில் நமது வீரர்கள் சீனர்களால் தாக்கப்பட்டபோதும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை ராகுல் கூறியிருக்கிறார். இதுதான் காங்கிரஸ் கட்சியினரின் மனநிலை.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா சீனர்களுக்கு இராஜதந்திர ரீதியாக பதிலடி கொடுத்த விதம் பாராட்டுக்குரியது. இந்தியாவிற்கு எதிராக சீனா பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா மீது ஒரு குற்றச்சாட்டையும் கொண்டு வர முடியவில்லை.
சீனாவுக்கு பிரதேசங்களை விட்டுக் கொடுத்தவர்களைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளை மதிப்பிட தேவையில்லை. அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், பிரதமர் நரேந்திர மோடி தேசத்திற்காக உறுதியாக நிற்கிறார். அதேபோல, காங்கிரஸ் கூட்டணி மோதல்கள் மற்றும் அவநம்பிக்கைகள் நிறைந்தது. இந்த கூட்டணியை இந்திய வாக்காளர்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். மத்தியில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம்” என்று கூறியிருக்கிறார்.