உலகிலேயே மலிவான விலையில் இந்தியாவில் 850 மில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள், இன்டர்நெட் சேவையைப் பெறுகின்றனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில், காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி,
“இந்தியாவில் 850 மில்லியனுக்கும் அதிகமான இணையப் பயனர்கள், உலகிலேயே மலிவான விலையில் இன்டர்நெட் சேவையை பெறுகின்றனர்.
இது இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தின் வேகத்தை எடுத்துக்காட்டுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் மாற்றத்திற்காக, 2015ம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா என்ற முயற்சியை துவக்கினோம்.
வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்க மைல்கல். இவற்றில் 67 சதவீத கணக்குகள் கிராமப்புறங்களில் துவங்கப்பட்டுள்ளன. நியாயமான டிஜிட்டல் அமைப்பை உருவாக்க வேண்டும். நிர்வாகத்தை மாற்றியமைக்கவும், அதை மிகத் திறமையாகவும், வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றுவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம்.
கோவின் போர்டல் இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்தை ஆதரித்தது. டிஜிட்டல் பொருளாதாரம் உலகளாவிய ரீதியில் பரவுவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். டிஜிட்டல் பொருளாதாரம் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.
தனித்துவ டிஜிட்டல் அடையாளத் தளமான ஆதார், 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கியது. ஜன்தன் வங்கிக் கணக்குகள், ஆதார், மொபைல் ஆகிய ஜாம் மும்மூர்த்திகளின் சக்தியைப் பயன்படுத்தி இந்தியாவில் நிதிச் சேர்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளோம்.
ஒவ்வொரு மாதமும், ஏறத்தாழ 10 பில்லியன் பரிவர்த்தனைகள் எங்கள் உடனடிக் கட்டண அமைப்பான யுபிஐயில் நடைபெறுகின்றன.
உலகளாவில் தற்போது இணையதள பரிவர்தனைகளில் 45% க்கும் அதிகமானவை இந்தியாவில் நிகழ்கின்றன.
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் இ-வணிகத்தை ஜனநாயகப்படுத்துகிறது. முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வரிவிதிப்பு முறைகள் வெளிப்படைத்தன்மை மற்றும் மின் ஆளுமையை ஊக்குவிக்கின்றன.செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மொழி மொழிபெயர்ப்பு தளமான பாஷினியை உருவாக்கி வருகிறோம். இது இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு உதவும்.
இந்தியா தனது அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.