மேடையில் கிடந்த இந்திய நாட்டின் தேசியக்கொடியை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா மெய்சிலிர்த்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
“பிரிக்ஸ்” கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கடந்த 22-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இம்மாநாட்டில் பிரேசில், இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ரஷ்யா தரப்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்றார். பல்வேறு நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில், தலைவர்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
முன்னதாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸாவும் புகைப்படம் எடுப்பதற்காக மேடை ஏறினர். அப்போது, அவர்களின் அருகில் வைக்கப்பட வேண்டிய தேசியக்கொடிகள், மேடையில் கிடந்தன. இதைக்கண்டு பதறிப்போன பிரதமர் மோடி, குனிந்து நம் நாட்டின் தேசியக்கொடியை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். இதைப் பார்த்த தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா, பிரமதர் மோடியை பாராட்டியதோடு, கீழே கிடந்த தங்களது நாட்டுக் கொடியை எடுத்து தனது உதவியாளரிடம் கொடுத்தார்.
இதையடுத்து, அந்த உதவியாளர் பிரதமர் மோடியிடம் இருந்த இந்திய தேசியக்கொடியை வாங்க முற்பட்டார். ஆனால், அது தன்னிடமே இருக்கட்டும் என்று கூறி, பிரதமர் மோடி தனது பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டார். பிரதமர் மோடியின் இத்தகைய செயல், அங்கிருந்த பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் மெய்சிலிர்க்கச் செய்தது என்றால் மிகையாகாது.
















