சென்னையில் பிரபல செல் போன் கடையில் மத்திய உளவுத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
உலக அளவில் போதைப் பொருள் அதிக அளவில் கடத்தப்படும் நாடுகளில் முக்கிய இடம் வகிப்பது இலங்கை. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குக் கடல் மார்க்கமாகப் போதைப் பொருள் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து புகார் எழுந்தது.
மேலும், போதைப் பொருள் கடத்தும் நபர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் தெரிய வந்தது. அவர்கள் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதும் மத்திய உளவுத்துறை போலீசாரின் ரகசிய விசாரணையில் அம்பலத்திற்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தீவிர விசாரணை நடத்திய மத்திய உளவுத்துறை போலீசார், தமிழகத்தில் உள்ள கியூ பிரிவு போலீசாருடன் இணைந்து சோதனை நடத்தி, முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்ய ரகசியமாக திட்டமிட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னையின் முக்கியப் பகுதியான பாரி முனையில் 2-வது கடற்கரை பகுதியான ராயபுரத்தில் மன்சூர் என்பவருக்குச் சொந்தமான செல்போன் கடையில் திடீர் சோதனை நடத்தினர். நேற்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், மன்சூர் உடன் பிறந்த நியாஸ் மற்றும் கபீர் ஆகியோருக்கு போதைப் பொருள் கடத்தில் விவகாரத்தில், தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் கண்டறியும் வகையில் இந்தச் சோதனை நடைபெற்றதாக மத்திய உளவுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்தியாவில் உள்ள பெரும்பாலான வளங்களை அனுபவித்துக் கொண்டு அந்நிய நாட்டுப் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்துச் செயல்படும் துரோகிகளைக் கடுமையான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், சோதனையொட்டி, அந்த பகுதியில் பாதுகாப்பு கருதி, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.