தவெக எம்.எல்.ஏ விடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமின் மனுவிற்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக், ரமேஷ் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
மனுவில், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையிலோ, புகாரிலோ தங்கள் பெயர் இடம் பெறவில்லை என்றும், தங்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் கூறப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
குதிரை பேரம் தொடர்பாக தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் தொலைபேசி மூலமாகவோ வாட்ஸ் ஆப் மூலமாகவோ பேசியதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனக் கூறியுள்ளனர்.
பின்னர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பாமல், சட்ட விதிகளை பின்பற்றாமல் காவல்துறை தங்களை கைது செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே தங்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தங்களை காவலில் வைக்க எந்த அடிப்படையும் இல்லை என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளனர்.
இந்த மனு நீதிபதி ஜி. கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்று கொண்ட நீதிபதி மனுவிற்கு வருகிற ஜூலை 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
















