தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில் 43-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இந்து முன்னணி மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இந்து முன்னணி மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரைத்துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் கலைத்துறையினர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு, விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்பதை பெருமையாக கருதுவதாக தெரிவித்தார். இந்த ஆண்டு அவிநாசியில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, திரைப்படப் படப்பிடிப்பு பணிகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கியதாக கூறினார். விநாயகரின் நிகழ்ச்சி என்பதால் அதற்கான காலஅட்டவணையை தவறவிடக்கூடாது என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
மேலும், இந்து மதம் தொடர்பான கருத்துகளை வெளிப்படையாக பேசும் திரைத்துறையினரை ‘திரைப் போராளிகள்’ என குறிப்பிட்ட பேரரசு, அவ்வாறு குரல் கொடுப்பவர்கள் தங்களது தொழில் மற்றும் வாழ்வாதாரத்தில் எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்தார்.
இந்து மதம் தொடர்பான விமர்சனங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது அரசியல் அல்ல; அறம் மற்றும் தர்மம் சார்ந்த விஷயம் எனக் குறிப்பிட்ட அவர், அடுத்த தலைமுறையினரிடம் இந்து மதம் குறித்த புரிதலும், நம்பிக்கையும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தினார். கோயில்கள் மற்றும் மத நம்பிக்கைகள் தொடர்பான விவகாரங்களில் மக்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் பேரரசு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விநாயகர் சதுர்த்தி பாடல் வெளியீட்டு விழாவில் திரைத்துறையினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
இந்து முன்னணி சார்பில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளில் இயக்குநர் மோகன் ஜி, நடிகர் ரஞ்சித் உள்ளிட்டோர் தொடர்ந்து பங்கேற்று வருவதாகவும், அவர்களின் பங்களிப்பு இந்து சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘தமிழர் பண்பாடும் சனாதன இந்து மதமும் ஒன்றே’ என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த காடேஸ்வரா சுப்பிரமணியம், விநாயகர் சதுர்த்தி விழா இந்து ஒற்றுமைக்கு முக்கிய பங்காற்றும் என்றும் கூறினார்.
கிருஷ்ண ஜெயந்திக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்திருப்பதற்கு பாராட்டு தெரிவித்தார்.
“விநாயகர் சதுர்த்தி விழாவில் முதலமைச்சர் பங்கேற்க வேண்டும் என கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“ஐஸ் ஹவுஸ் வழியாக விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
















