சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க செய்யூர், மாநெல்லூர் ஆகிய இரண்டு இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த தி.மு.க ஆட்சியில், பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அத்திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார்.
இதையடுத்து, பரந்தூருக்கு மாற்றாக, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டிக்கு அருகிலுள்ள மாநெல்லூர் ஆகிய இடங்களை தவெக அரசு தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த இரண்டு இடங்களிலும் முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு நடத்தக்கோரி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் தனது சாத்தியக்கூறு ஆய்வறிக்கையில் பரிந்துரைகளை வழங்கிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள செய்யூர், புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், கல்பாக்கத்திலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
இது மீனம்பாக்கத்தில் உள்ள தற்போதைய விமான நிலையத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அதேபோல் விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள மற்றொரு இடமான மாநெல்லூர், சென்னையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
















