சத்தீஸ்கர் முதல்வரின் அரசியல் ஆலோசகர், சிறப்பு அதிகாரி ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்தாண்டு அம்மாநிலத்துக்குச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், அம்மாநிலத்தில் சுரங்க ஊழல், மதுபான ஊழல், மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி முறைகேடு, ஆன்லைன் சூதாட்ட முறைகேடு என ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, கடந்த 2 நாட்களாக அம்மாநிலத்தின் ராய்ப்பூர், துர்க் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா, சிறப்பு அதிகாரி ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வினோத் வர்மா வீட்டில் சோதனை நடந்தபோது, பாதுகாப்புக்காகத் துணை ராணுப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல, துர்க நகரில் உள்ள ஒரு தொழிலதிபர் மஹாதேவ் வீட்டிலும் சோதனை நடந்தது. எதற்காக இச்சோதனை நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை. ஆன்லைன் சூதாட்ட முறைகேடு தொடர்பாக இச்சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மஹாதேவ் 25 இடங்களில் ஆன்லைன் சூதாட்ட மையங்களை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் மஹாதேவின் மையங்களில் சுமார் 1 மில்லியன் நபர்கள் பந்தயம் கட்டி இருக்கிறார்கள். ஆனால், அவரது ஆன்லைன் செயலியின் செயல்பாட்டுக் குழு, 5,000 ரூபாய் தருவதாகக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி, அவர்களது ஆதார் மற்றும் நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) விவரங்களை பயன்படுத்தி, போலி ஆவணங்களை தயார் செய்து 5,000 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறது” என்று தெரிவித்தார்.