அமலாக்கத்துறை மனு தொடர்பாக, நியூஸ் கிளிக் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், தற்போது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரின் மனு தொர்பாக, டெல்லி நீதிமன்றம் மற்றொரு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
நியூஸ் கிளிக் செய்தி இணையதளம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக அவதூறு செய்திகளை வெளியிட்டு வந்தது. ஆகவே, அந்நிறுவனத்தின் அலுவலகத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் தீவிரமாக கண்காணித்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த 2021-ம் ஆண்டு அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் நியூஸ் கிளக் இணையதள நிறுவனம் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் நிறுவனங்களிடம் இருந்து 86 கோடி ரூபாய் நிதியுதவிப் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இப்பரிவர்த்தனையை ஆய்வு செய்தபோது, சீன நாட்டின் ஆதரவாளரான நெவில் ராய் சிங்கம் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் மீதும், அதன் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மீதும் கடும் நடவடிக்கை எடுக்கு அமலாக்கத்துறை முனைப்புக் காட்டியது. ஆனால், பிரபீர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அடிப்படையில், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அமலாக்கத்துறை அமைதி காத்து வந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் “தி நியூயார்க் டைம்ஸ்” இதழ், நியூஸ் கிளிக் இணையதளம் இந்தியாவுக்கு எதிராக அவதூறாகவும், பொய்யாகவும் செய்திகளை வெளியிட சீன ஆதரவு நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவி பெறுவதாகக் குறிப்பிட்டிருந்தது. மேலும், நெவில் ராய் சிங்கம் என்கிற அமெரிக்க தொழிலதிபரின் மின்னணு அஞ்சல் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் பல்வேறு பத்திரிகையாளர்கள், நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு சீன பிரச்சாரத்தை ஊக்குவிக்குமாறு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், காங்கிரஸ், நியூஸ் கிளிக், சீனா ஆகியவை ஒரு தொப்புள் கொடி உறவுகள் என்று கடுமையாக சாடினார். அதேசமயம், தேசத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் நியூஸ் கிளிக் நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கும் முக்கிய பிரமுகர்கள் 255 பேர் கடிதம் எழுதினார்கள்.
இதையடுத்து அதிரடியாக களமிறங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், நியூஸ் கிளிக் இணையதள நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்கயாஷ்தாவுக்குச் சொந்தமான 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, 41 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புநிதி ஆகியவற்றை முடக்கினர். மேலும், நியூஸ் கிளிக் நிறுவன விசாரணை தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவையும் தாக்கல் செய்தனர். அந்த மனுவில் நியூஸ் கிளிக் நிறுவனத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று 2021-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு அமலாக்கத்துறை கோரி இருக்கிறது. இம்மனுவைத் தொடர்ந்து, நியூஸ் கிளிக் நிறுவனத்துக்கும், அதன் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்கயாஸ்தாவுக்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்த நிலையில், பண மோசடி தொடர்பாக நியூஸ் கிளிக் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மீது டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், அவரை கைது செய்யக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால், அவரை விசாரணைக்கு உட்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவின் அடிப்படையில் பிரபீர் புர்காயஸ்தாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதன் மூலம், சீனாவிடம் பணம் பெற்றுக் கொண்டு, இந்தியாவுக்கு எதிராக அவதூறாக செய்தி வெளியிட்டு வந்த பிரபீர் புர்காயஸ்தாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.