அமெரிக்கா- ஈரான் இடையே மீண்டும் போர் ஏற்பட்டிருப்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கிறது. ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் பதித்த ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகளை கண்டறிந்து, அகற்றும் தொழில்நுட்பம் அந்நாட்டிடம் இல்லாததால், அங்கு கப்பல் போக்குவரத்து சீரானாலும் அசம்பாவிதம் நேரிடும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்…
அமெரிக்கா- ஈரான் போர் பதற்றத்துக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணைக்குச் சொந்தம் கொண்டாடும் ஈரான், அதைச் சுற்றிலும் கப்பல் செல்லும் வழித்தடங்களில் ஆயிரக்கணக்கில் கண்ணிவெடிகளை பதித்தது.
ஒரே நேரத்தில் முழு கடல் வழித்தடத்தையும் மூடாமல், தேவையான நேரங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அச்சுறுத்தலை உருவாக்கும் வகையில், இந்த கண்ணிவெடிகளை ஈரான் பதித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம், எதிரி நாடுகளின் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதோடு, உலக நாடுகளுக்கு மறைமுக எச்சரிக்கையையும் ஈரான் விடுத்துள்ளது.
இந்த கண்ணிவெடிகளைக் கண்டறிந்து அகற்றுவதற்காக அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அது பலனளிக்கவில்லை. கடலின் ஆழத்தில் மறைந்திருக்கும் கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பதும், அவற்றை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்வதும் மிகுந்த சவாலாகவே நீடிக்கிறது.
இதனால், நவீன கால போரிலும் கூட கடற்படை கண்ணிவெடிகள் இன்னும் சக்திவாய்ந்த ஆயுதமாகவே இருக்கின்றன என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நடைபெறும் இந்த மோதல், உலகின் முக்கிய கடல் வழித்தடங்களின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏனெனில், ஒரு நாடு தனது அரசியல் அல்லது ராணுவ நோக்கத்திற்காக சர்வதேச கடல் பாதையை அச்சுறுத்த முடிந்தால், உலக வர்த்தகமே பாதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள், எரிசக்தி வளங்கள் என அனைத்து விநியோகமும் சீர்குலையும். அதுமட்டுமல்லாமல், உலக நாடுகள் சுதந்திரமாக கடல் வழியாக பயணிப்பதும் கேள்விக்குறியாகிறது.
போர்க்காலங்களில் கடலில் கண்ணிவெடிகள் பதிக்கப்படுவது புதிது ஒன்றும் அல்ல. முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என இரண்டு உலகப் போர்களிலும் போரின் போக்கையே மாற்றிய ஆயுதங்களில் கண்ணிவெடிகளும் ஒன்று.
இதனால், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கண்ணிவெடிகளை பதித்ததை வெறுமனே கடல் வழித்தடத்தை மூடும் முயற்சி என்று மட்டும் பார்க்க முடியாது என சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மாறாக பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி, எதிரி நாடுகளின் மனதில் அச்சத்தை விதைத்து, தனது ராணுவத் திறனை வெளிப்படுத்தும் உத்தியின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்க வேண்டும் என்பதுதான் பாதுகாப்பு ஆய்வாளர்களின் கருத்து.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் கண்ணிவெடிகளை பதித்துள்ள நிலையில், இதுபோன்ற அபாயத்தை எதிர்கொள்வது அமெரிக்காவுக்கும் புதிது அல்ல. 1980-களில் நடைபெற்ற ‘டேங்கர் போர்’ காலத்திலேயே, ஈரானும், ஈராக்கும் பாரசீக வளைகுடாவில் கண்ணிவெடிகளை பதித்து, ஒருவரையொருவர் தடுக்க முயன்றபோது எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க கடற்படை நேரடியாக களமிறங்கியது.
அதன் பிறகு முதல் வளைகுடா போரின்போதும், ஈரான் மீண்டும் கடற்படை கண்ணிவெடிகளை பயன்படுத்தியது. அவற்றை அகற்ற 8 நாடுகள் இணைந்து நீண்டகால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
தற்போதைய சூழலில், ஈரான் எத்தனை கண்ணிவெடிகளை கடலில் பதித்துள்ளது என்பது யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. அதைவிட கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தாங்கள் பதித்த கண்ணிவெடிகள் அனைத்தும் எங்கே இருக்கின்றன? என்பது தங்களுக்கே தெரியாது எனவும், அவற்றை முழுமையாக அகற்றும் தொழில்நுட்பம் தங்களிடம் இல்லை என்றும் ஈரான் கையை விரித்துவிட்டது.
இதனால் கடலில் பதிக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேச கப்பல்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
















