கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி இருக்கிறது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இக்கட்சியைச் சேர்ந்த ஏ.சி.மொய்தீன், திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர், ஏற்கெனவே அமைச்சர் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், கடந்த 2010-ம் ஆண்டு திருச்சூரைத் தலைமை இடமாகக் கொண்டு கருவண்ணூர் கூட்டுறவு வங்கி செயல்பட்டது. அப்போது, பொதுமக்களின் சொத்துகளை அவர்களுக்குத் தெரியாமலேயே அடமானம் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்குக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், 125 கோடி ரூபாய் மோசடி நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இச்சம்பவம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிச்சத்துக்கு வந்து கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, மேற்கண்ட மோசடியில் ஈடுபட்ட பலரது வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த வகையில், குன்னங்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.மொய்தீன் வீடு உட்பட, அவருக்குச் சொந்தமான இடங்களில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த நிலையில், திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியிலுள்ள மொய்தீன் வீடு மற்றும் நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.