காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் (KZF) தலைவர் ரஞ்சீத் சிங் நீதாவுக்கு எதிராகத் தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியாவில் நடக்கும் பல்வேறு குற்றச் சம்பங்களுக்கு காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் (KZF) தலைவர் ரஞ்சீத் சிங் நீதா காரணமாக இருந்ததால், அவருக்கு எதிராகத் தேசியப் புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜம்முவில் வசிக்கும் தர்ஷன் சிங்கின் மகன் ரஞ்சித் சிங் நீதா சில மாதங்களாகத் தலைமறைவாக உள்ளார். அவர், 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹரியானா மாநிலம் அம்பாலா அருகே ஜீலம் விரைவு இரயிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், 1997-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்தில் பதான்கோட் பகுதியில் 2 பேருந்துகளில் வெடிகுண்டு வைத்த சம்பவம், 1998-ம் ஆண்டு இல்ஷாலிமார் விரைவு இரயிலில் வெடிகுண்டு வைத்த சம்பவம், 1999 நவம்பரில் பதான்கோட் அருகே பூஜா விரைவு இரயிலில் நடந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டு 42 பேர் காயமடைந்த சம்பவம், 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீல்டா விரைவு இரயிலில் நடந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்கு மூளையாகச் செயல்பட்டது காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் (KZF) தலைவர் ரஞ்சீத் சிங் நீதா என்பது தெரியவந்தது.
இதன் பின்னர் தேடப்படும் குற்றவாளியாக நீதா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2000-ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் உள்ள கைலாஷ் விருந்தினர் மாளிகை தாக்குதலில் 8 பேர் காயமடைந்த சம்பவத்துக்கும் பின்னணியாக நீதா செயல்பட்டது தெரியவந்தது. இதனால், செப்டம்பர் 14 வரை அல்லது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குள் மொஹாலியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் நீதா ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.