வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடந்த இந்தியா – வங்கதேசம் இடையேயான 5-வது வருடாந்திரப் பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையிலான வருடாந்திரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான மிக உயர்ந்த நடைமுறையாகும். அந்த வகையில், 5-வது வருடாந்திர பேச்சுவார்த்தைக்காக இந்திய பாதுகாப்புச் செயலாளர் கிரிதர் அரமானே, வங்கதேசத்துக்கு 2 நாள் பயணமாக கடந்த 27, 28-ம் தேதிகளில் சென்றிந்தார். அப்போது, தலைநகர் டாக்காவில் நடந்த 5-வது வருடாந்திரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தையில், வங்கதேசப் பாதுகாப்புப் படைப் பிரிவின் முதன்மை பணியாளர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் வாக்கர் உஸ் ஜமானுடன் இணைந்து கூட்டத்திற்கு தலைமைத் தாங்கினார்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மறு ஆய்வு செய்யப்பட்டன. மேலும், அதிகரித்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஈடுபாடுகள் குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் தற்போதுள்ள இரு தரப்பு பயிற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், கிரிதர் அரமானே மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் வாக்கர் உஸ் ஜமான் ஆகியோர் பயனுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
அப்போது, 5-வது வருடாந்திர பாதுகாப்புப் பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்பட்ட பொதுவான புரிதலின் அடிப்படையில் இரு நாடுகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை எதிர்நோக்குவதாகத் தெரிவித்தனர்.