இந்துக்கள் கொண்டாடி மகிழும் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளை விடுமுறையாக அறிவித்த தமிழக அரசை வன்மையாக கண்டிப்பதாகவும், உடனே மாற்று அறிவிப்பை அரசாணை மூலம் வெளியிட வேண்டும் என்றும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம், தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு ஜனவரியில் வந்தபோதே, அதில் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 17 ஞாயிறு என்று இருந்ததை சுட்டிக்காட்டி, உடனே திருத்தம் வெளியிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொண்டோம். ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது.
கிறித்துவ முஸ்லிம் பண்டிகள் குறித்து அந்த மதத்தலைவர்களை ஆலோசித்து அதனை அறிவிக்கும் தமிழக அரசு, இந்துக்களின் பண்டிகைகள் பற்றிய விவரத்தைத் தான்தோன்றித்தனமாக அறிவிப்பது அறிவுடைய செயல் இல்லை.
தமிழ்நாட்டில் சுமார் 8 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். ரம்ஜான் விடுமுறை குறித்து வருடத்தின் ஆரம்பத்தில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டாலும் முதல்நாள் மாலை ஹாஜியின் கண்களுக்குப் பிறை தெரியவில்லை என்றால் அதற்கு அடுத்த நாள் ரம்ஜான் விடுமுறையை மாற்றி தமிழக அரசு கெசட் – அரசாணை அவசரம் அவசரமாக அன்று மாலையே வெளியிடுகிறது.
அதுவே, தமிழகத்தில் 88 சதவீதம் உள்ள இந்துக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தவறான தேதியில் அறிவித்ததை இந்து முன்னணி மற்றும் ஆன்மிக பெரியவர்கள் கருத்துக்களை ஊடகங்கள் சுட்டிக்காட்டிய பின்னரும், தமிழக அரசு திருத்தி அரசாணை வெளியிடாததை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக முதல்வர் இந்துக்களை அவமானப்படுத்தும் செயலாக இது இருக்கிறது.
ஞாயிறு அன்று தேவையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் ஒருநாள் விடுமுறை இல்லாமல் போனாலும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் இதுவரை இதுகுறித்து கருத்து தெரிவித்ததாக தெரியவில்லை. இது அந்தச் சங்கங்களின் தி.மு.க விசுவாசத்தால் உண்மையைப் பேசுவதற்கு தயங்கலாம்.
ஆனால், இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை நாளில் அரசு அலுவலகங்கள் செயல்படுவது இந்துக்களின் சமய விழாவிற்கு இடையூறாக இருக்கும். மேலும் அரசு ஊழியர்களின் குடும்பங்களில் உள்ளவர்கள் விநாயகரைப் பக்திப் பூர்வமாக கொண்டாடுவதும் தடைபடும்.
எனவே, இந்துக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி பண்டிகை அரசு விடுமுறை செப்டம்பர் 18 என அரசாணை உடனடியாக வெளியிடுமாறு இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், இந்த குழப்பத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாமல் தமிழக அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
தமிழக முதல்வர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, செப்டம்பர் 18 விநாயகர் சதுர்த்தி பண்டிகை அரசு விடுமுறை என அறிவிப்பை வெளியிடவில்லை என்றால் தமிழக அரசின் இந்து விரோத போக்கை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு மக்களை ஒருங்கிணைத்து இந்து முன்னணி போராட்டம் நடத்த நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.