ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதான் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனம் 370-வது பிரிவு மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த சிறப்பு அந்தஸ்தால் அம்மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்தாடியது. இதை முடிவுக்குக் கொண்டுவர பா.ஜ.க. தலைமையாலான மத்திய அரசு முடிவு செய்தது.
எனவே, 2-வது முறையாக 2019-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இதில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் அடங்கிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசியல் சாசனத்தின் முகப்புரையான சோசலிசம், மதச்சார்பின்மை ஆகியவை ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தக் கூடியதுதான். மத்திய அரசின் 370-வது பிரிவு ரத்து நடவடிக்கை சரியானதே.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடுகள் இல்லாமல் வளர்ச்சி என்பது சாத்தியமற்றது. தொழில் முதலீடுகளுக்கு 370-வது பிரிவு தடையாக இருந்தது. தற்போது 370-வது ரத்துக்குப் பிறகுதான் ஜம்மு காஷ்மீருக்கு முதலீடுகள் அதிக அளவில் கிடைக்கிறது. சுற்றுலாப் பயணிகளும் பெரும் எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.அதோடு, ஜம்மு காஷ்மீருக்கு 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதே ஒரு தற்காலிக நடவடிக்கைதான். எந்த நேரத்திலும் ரத்து செய்யக் கூடிய வகையில்தான் அந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது” என்று வாதிட்டார். அதோடு, 1964-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவை நீக்கக் கோரும் தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபப்ட்டதையும் சுட்டிக்காட்டினார்.