திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குடப்பத்தில் ஸ்ரீ குண்டம்ம கோடங்கித் தாத்தன் கோவில் திருவிழா, 35 வருடங்களுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக தொடங்கியது.
திங்கட்கிழமை ஆபரணப் பெட்டியை தேவராட்டம், சேர்வையாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, விழாவில் பங்கேற்றவர்கள் மேள தாளம் முழங்க, நடனம் ஆடியும், பாட்டுப்பாடியும் கொண்டாடினர். பெண்கள் கொழுக்கட்டை படையல் வைத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான “மாடு மாலை தாண்டும் திருவிழா நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கொத்துக் கொம்பு என்ற இடத்தில் உறுமி ஓசை முழங்கியதும், காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகள் எல்லைக்கோட்டை நோக்கி புழுதி பறந்து சென்றன.
அப்போது, பொதுமக்கள் கைகளைத் தட்டி, காளைகளை உற்சாகமூட்டினர். வெற்றி பெற்ற காளைகள் மீது மஞ்சள் பொடி தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில், முதலிடம் பிடித்த காளைக்குப் பாரம்பரிய முறைப்படி எலுமிச்சம் பழம், மஞ்சள் பொடி, கரும்பு மற்றும் கொழுக்கட்டை ஆகியவைப் பரிசாக வழங்கப்பட்டன.
விழாவில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கையில் கம்புகளுடன் பங்கேற்றது வியப்பை ஏற்படுத்தியது.